அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம்: சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் 25% தள்ளுபடி

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம்: சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் 25% தள்ளுபடி

2 mins read
9e13c3dd-9adc-42d3-917a-4cab2b60935b
கோப்புப்படம்: எஸ்டி -

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின்கீழ் உள்ள கடைகளுக்கும் சந்தைகளுக்கும் இம்மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் 25 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும்.

வர்த்தக அமைப்புகளுக்கான இந்த நிதி உதவிக்கு கிட்டத்தட்ட $300,000 செலவு ஆகும் என்று பாட்டாளிக் கட்சியால் நிர்வகிக்கப்படும் இந்த நகர மன்றம் தெரிவித்தது.

கொரோனா கிருமித்தொற்று முறியடிப்பு நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக தளர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வர்த்தகங்களுக்கு உதவும் இத்திட்டம் குறித்து முடிவெடுக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் கட்டத்தில், இன்னும் பல வர்த்தகங்கள் செயல்படவில்லை அல்லது கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அந்த நகர மன்றம் குறிப்பிட்டது.

சிரமமான கொவிட்-19 சூழ்நிலையில் வர்த்தகங்களுக்கு உதவுவது குறித்து, நகர மன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசகர்களும் ஆலோசித்தனர்.

ஏற்கெனவே, வர்த்தகங்கள் நகரமன்றத்தின் பகுதியிலுள்ள வெளிப்புற விளம்பர இடங்களைப் பயன்படுத்துவதற்கான ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட காலத்துக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றும் அது கூறியது.

சேவைப் பராமரிப்புக் கட்டணத்தைக் குறித்த காலத்துக்குள் செலுத்த தவறியதற்கான தாமத கால கட்டணத்தையும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் இந்த நகரமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம், மக்கள் செயல் கட்சியால் நடத்தப்படாத ஒரே நகர மன்றமாகும்.

மக்கள் செயல் கட்சியின் கீழுள்ள 15 நகர மன்றங்களில் உள்ள கடைகளுக்கும் சந்தைகளுக்கும் ஜூலை முதல் அக்டோபர் வரையில் சேவைப் பராமரிப்புக் கட்டணத்தில் 15 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும் என்று அந்நகர மன்றங்களுக்கான ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் டியோ ஹோ பின் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிவாரணம் கிட்டத்தட்ட $3 மில்லியன் ஆகும் என்று அவர் கூறினார்.