அதிக தமிழ் ஆற்றல் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வின்படி தமிழர்கள் நான்கில் மூன்று பங்கினர் தமிழ் மொழி ஆற்றல் கொண்டுள்ளார்கள் என்றாலும் அந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்துள்ளதென தெரியவந்துள்ளது. அத்துடன் சீனர்களையும் மலாய்க்காரர்களையும் விட அனைத்து வயது பிரிவுடைய இந்தியர்களில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் அதிகமாக உள்ளனர். கொள்கை ஆய்வுக் கழகம் இந்த விவரங்களை நேற்று வெளியிட்டது.

ஆய்வில் கலந்துகொண்ட இந்தியர்களிடையே தமிழ் ஆற்றல் உடையவர்களின் விகிதம் 2013 ஆம் ஆண்டில் பதிவான 64 விழுக்காட்டிலிருந்து 2018ஆம் ஆண்டில் 54 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. ஆயினும், கருத்தாய்வில் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை பிற இனத்தவரைக் காட்டிலும் குறைவு என்பதால் இந்த முடிவில் நிச்சயமற்ற தன்மை ஓரளவு இருப்பதாக அறிக்கையைத் தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.

2013ஆம் ஆண்டிலும் 2018ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 4,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பங்கேற்றோரில் கிட்டத்தட்ட 800 பேர் இந்தியர்கள். இவர்களில் சுமார் 500 பேர் தமிழ் பேசத் தெரிந்தவர்கள். மொழித்திறன், மொழி பயன்பாடு மொழி தொடர்பான அடையாளம் போன்ற அம்சங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இந்த ஆய்வறிக்கையில் இடம்பெறுகின்றன.

கூடுதல் உழைப்பு தேவைப்படுதல்

வளமான வாழ்க்கையைப் பெற ஆங்கிலம் மற்றும் மாண்டரின் பேசத் தெரிந்தவர்களைக் காட்டிலும் தாங்கள் அதிகம் உழைக்க வேண்டியுள்ளதாக தமிழர்களும் மலாய்க்காரர்களும் கருதுவதாக இதில் கூறப்படுகிறது.

2018ல் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடையே 71% வரையிலானோர், பொது இடத்தில் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான உரையாடல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர்.

2013ஆம் ஆண்டில் கலந்துகொண்டவர்களுக்கும் 2018ல் பங்கேற்றவர்களுக்கும் இடையே எண்ணிக்கை அளவிலான வேறுபாடு இருப்பதால் ஆய்வின் கண்டுபிடிப்புகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட இயலாமல் போகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம்

நல்லிணக்கத்தில் சிங்கப்பூரர்கள் அக்கறை கொள்கின்றனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுவதாக ஆய்வை எழுதியவர்களில் ஒருவரான டாக்டர் மேத்தியூ மேத்தியூஸ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“முடிந்தவரை சமூகச் சூழலில் பிறரை ஒதுக்குவதைக் குறைக்க முயலவேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்,” என்றார்.

சிங்கப்பூரில் பல்வேறு மொழிகள் அமைதியுடன் ஒருசேர தழைப்பதாகவும் தனித்தன்மை வாய்ந்த பல கலாசார அடையாளத்தை வடிவமைப்பதற்கு இந்தப் பன்முகத்தன்மை முக்கியம் என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மொழியால் ஆதாயம்

குறிப்பிட்ட ஒரு மொழியால் ஒருவர் அடையும் பொருளாதார மற்றும் சமூக ஆதாயத்தைக் குறிக்கும் ‘மொழியியல் மூலதனம்’ (linguistic capital) என்பதைப் பொறுத்தவரை வெவ்வேறு மொழிகளின் மீது மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள வர்த்தகச் சூழலிலும் வேலையிலும் மாண்டரின் மொழி உதவும் என்று சீன சிங்கப்பூரர்களில் 59 விழுக்காட்டினர் நம்புகின்றனர். தங்களது தாய்மொழியைப் பற்றிய அதே நம்பிக்கையை 45 விழுக்காடு மலாய்க்காரர்களும் 45 விழுக்காடு இந்தியர்களும் கொண்டுள்ளனர்.

சீனர்களும் இந்தியர்களும் நாளடைவில் ஆங்கிலத்தைத் தங்கள் பிரதான மொழியாக அடையாளப்படுத்திக்கொள்வதாக ஆய்வு கூறுகிறது. 2018ல் இந்திய பங்கேற்பாளர்களில் 43 விழுக்காட்டினர் இவ்வாறு கருதுகின்றனர். இது 2013ல் 34 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது.