பிரதமர் லீ: இம்முறை முந்தைய தேர்தல்களைப் போல இராது

கொவிட்-19 கிருமிப் பரவல் தற்போது சீராக இருக்கும் இந்த வேளையில், புதிய அரசாங்கத்திடம் ஐந்தாண்டு ஆட்சி உரிமையை அளிக்கும் விதமாக பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.

தொலைக்காட்சி வழியாக நேற்று உரையாற்றிய பிரதமர் லீ, இந்தத் தேர்தல் சிங்கப்பூர் சந்தித்த முந்தைய தேர்தல்களைப் போல இருக்காது என்றார்.

அதற்கு, கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மட்டுமின்றி, இப்போதைய சூழலின் தீவிரமும் நம்முன் உள்ள பிரச்சினைகளும் காரணம் என்று திரு லீ குறிப்பிட்டார்.

“நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகும் அரசாங்கம் மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. அந்த முடிவுகள் உங்களின் வாழ்க்கையில், வாழ்வாதாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அம்முடிவுகள், அடுத்த ஐந்தாண்டு களுக்கு மட்டுமின்றி, நீண்ட காலத்திற்கு ஏற்றபடி நாட்டை வடிவமைப்பதாக இருக்கும்,” என்றார் பிரதமர்.

புதிய அரசாங்கம், தேர்தலுக்குப் பிறகு கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுதல், பொருளியல், வேலைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி, கடினமான முடிவுகளை எடுத்து, அதைச் செயல்படுத்த வேண்டி இருக்கும் என்று அவர் கூறினார்.

அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்ற நிலையில், அதற்குள் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும் என உறுதியாகக் கூற முடியாது என்றார் திரு லீ.

அதே வேளையில், தேர்தல் குறித்து அறிவிக்குமுன் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கவும் அரசியல் கட்சிகள் திறம்பட பிரசாரத்தில் ஈடுபடவும் முடிய வேண்டும் என்பதைத் தாம் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா நோய்ப் பரவலின்போது தென்கொரியா, தைவான், இன்னும் பல ஐரோப்பிய நாடுகள் தேர்தலை நடத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“நமது ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், நாம் முறையான, பாதுகாப்பான தேர்தலை நடத்த முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் பிரதமர் லீ.

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே அரசாங்கம் முழுமையாக கொரோனா தொற்றுப் பிரச்சினையில் கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.

அமைச்சரவை பொறுப்பில் நீடிக்கும்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோதும், தேர்தல் காலத்தில் தமது அரசாங்கம் தொடர்ந்து நாட்டை நிர்வகிக்கும் என்றும் அமைச்சரவை பொறுப்பில் நீடிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல, பொதுச் சேவைத் துறையும் வழக்கம்போல செயல்படும் என்றார் திரு லீ.

“ஒவ்வொரு பொதுத் தேர்தலின்போது இதுவே நடைமுறை. ஆனாலும், கொரோனா தொற்றுக்கு எதிராகவும் பொருளியலைக் கட்டிக்காக்கவும் வேலைகளைப் பாதுகாக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் காரணமாக இதை நான் இப்போது வலியுறுத்திச் சொல்கிறேன்,” என அவர் விளக்கினார்.

கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமைச்சுகள்நிலை பணிக்குழு தொடர்ந்து வழிநடத்திச் செல்லும் என்றும் அத்தியாவசியப் பணிகள் இடையறாது இடம்பெறும் என்றும் பிரதமர் லீ கூறினார்.

“உங்களின் சார்பாக செய்யப்பட வேண்டிய பணிகளைச் செய்ய, இந்தக் கொந்தளிப்பான சூழலைக் கடந்து செல்ல, மக்களின் வலுவான ஆதரவுடன் கூடிய, செயல்திறன்மிக்க அரசாங்கம் தேவை. நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் உங்களுடன் இணைந்து பணியாற்றும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதைத் தீர்மானிக்கும் வாய்ப்பு விரைவில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. நமது வாழ்க்கையை, வேலைகளை, எதிர்காலத்தைப் பாதுகாத்திட நீங்கள் கவனமாகச் சிந்தித்து, அறிவு பூர்வமாக வாக்களிப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்,” என்று பிரதமர் லீ கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!