சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வுகள் நடப்புக்கு வந்த பிறகு கொவிட்-19 தொற்று வேலையிடங்களில் அதிகரித்துள்ளது.
இரண்டாம் கட்டத் தளர்வுகளுக்கு முன்பு வேலையிடங்களில் கிருமித்தொற்று விகிதம் 22 விழுக்காடாக இருந்தது; இப்போது அந்த விகிதம் 36%ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாம் கட்டத் தளர்வுகள் நடப்புக்கு வந்த ஜூன் 19க்கு முன்பு 71 விழுக்காட்டு சமூக கிருமித்தொற்று சம்பவங்கள் வீடுகளில் இருந்தன; ஜூன் 19, ஜூலை 5க்கு இடைப்பட்ட காலத்தில் அந்த அளவு 41 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இந்தத் தகவல்களை, இன்று நடைபெற்ற அமைச்சர்நிலை குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். வேலையிடங்களில் கிருமித்தொற்றைக் குறைக்க நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
வீட்டிலிருந்தே வேலை செய்யும் சாத்தியமிருப்போர் அவ்வாறே தொடர்வதன் மூலம் கிருமித்தொற்றை மேலும் குறைக்க முடியும் என்றார் அவர்.
சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்குத் திரும்புமாறு உத்தரவிட்டிருப்பதாகக் கேள்விப்படுவதாகச் சொன்ன அவர், உரிய தேவையின்றி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்று குழுமம் கண்டறியப்படும் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்பதால் நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றார் அவர்.

