அடுத்த ஆண்டு முதல் நன்யாங் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பலதுறை பொதுப் பாடத் திட்டம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் பொதுவான மூலாதார பாடத்திட்டம் ஒன்றை படிக்க வேண்டி இருக்கும்.

அந்தப் பாடத்திட்டத்தின் வழியாக அவர்கள் பல துறைகளுடன் தொடர்புகொண்டு பலதுறை அறிவையும் தேர்ச்சிகளையும் பெறுவர்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மூலாதார பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் ஏட்டுக்கல்வியில் ஐந்தில் ஒரு பகுதி அளவிற்கு இருக்கும்.

மாணவர்களிடையே பலதரப்பட்ட ஆற்றல்களை உருவாக்குவது இதன் நோக்கம்.

தொடர்புக்கலை தேர்ச்சிகள், மின்னிலக்க அறிவு, தொழில் முனைப்பு, புத்தாக்க ஞானம் ஆகியவை இவற்றில் அடங்கும்.

இந்தப் பொது மூலாதார பாடத்திட்டம் மாணவர்களுக்குக் கட்டாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்களையும் பருவநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற பல அம்சங்களையும் மையமாக வைத்து புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

முழுமையான, பரந்த அளவிலான கல்வியின் முக்கியத்துவத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் எப்போதுமே வலியுறுத்தி வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ் தெரிவித்தார்.

இரட்டை பட்டம், ஒரு குறிப்பிட்ட பாடத்தை எடுத்து அதில் இரட்டை பட்டம் பெறுவது போன்றவை ஒருபுறம் இருக்க, ‘பொதுக் கல்வித் தேவைகள்’ என்ற படிப்பும் போதிக்கப்படும்.

இதில் மாணவர்கள் பல விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். அவற்றில் அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் ஆகியவற்றில் ஒருமித்த கவனம் செலுத்தும் பாடங்கள் அடங்கும்.

புதிதாக நடப்புக்கு வருகின்ற மூலாதார பாடத்திட்டம் இந்தப் பொதுக் கல்வி பாடங்களுக்குப் பதிலாக இடம்பெறும்.

மூலாதார பொது பாடத்திட்டத்தின் வழியாக மேலும் முன்னேறி மாணவர்கள் பல துறைகளையும் சேர்ந்த அறிவை பெற வேண்டும் என்று இந்தப் பல்கலைக்கழகம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

“உலகம் இப்போது பல புதிய சவால்களை எதிர்நோக்குகிறது. எதிர்கால சவால்களும் வேறுபட்டவையாக இருக்கும்.

“அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். ஒரு துறையில் மட்டும் ஆற்றல் இருப்பவர்கள் அத்தகைய சவால்களை வெற்றிகரமான முறையில் சமாளிப்பது இனிமேல் சிரமமாகிவிடும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

“பல துறை அறிவு இருந்தால்தான் இத்தகைய சாவல்களைச் சமாளிக்க முடியும். அதோடு மட்டுமின்றி, பல துறை அறிவு உள்ளவர்கள் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவதும் அவசியமானதாகும்,” என்று பேராசிரியர் விளக்கினார்.

மாறுகின்ற இந்த உலகச் சூழலில் வெற்றிகரமாகத் திகழ்வோர் தங்களுடைய குறிப்பிட்ட துறைகளுக்கு அப்பாலும் பரந்த அளவில் நாட்டத்தையும் அறிவையும் கொண்டிருக்க வேண்டும்.

பல துறைகளையும் சேர்ந்த குழுக்களில் பணியாற்றும் திறமையை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே வகுப்பறையில் சேர்ந்து பாடம் கற்பார்கள். தங்கள் துறைகளில் தாங்கள் பெற்ற அறிவையும் ஆற்றலையும் அவர்கள் குழுத்திட்டங்களில் பயன்படுத்துவார்கள்.

பல்கலைக்கழகத்தின் பல துறைகளும் ஒன்றாகச் சேர்ந்து பாடத்திட்டங்களை வடிவமைத்து மாணவர்களுக்குப் பலதுறை கல்வியை மிகவும் ஆழமாகப் போதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொவிட்-19க்குப் பிறகு ஒருவர் பலதுறை தேர்ச்சிகளைப் பெற்றிருப்பதற்கும் அவருக்கு வேலை கிடைப்பதற்கும் உள்ள தொடர்பு முக்கியமானதாக உருவெடுக்கும் என்று இந்தப் பல்கலைக்கழகத் துணைத் தலைவர் லியான் சான் தெரிவித்தார்.

புதிய மூலாதார பாடத்திட்டம் பல்கலைக்கழகத்தில் முதலில் சில துறைகளில் முன்னோடித் திட்டமாக இடம்பெறும். பிறகு அது 2021 ஆகஸ்ட்டில் பல்கலைக்கழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவப் படிப்பு மாணவர்களைத் தவிர, இளநிலை பட்டப் படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் இந்தப் புதிய மூலாதார பாடத்திட்டம் பொருந்தும் என்றார் அவர்.

‘அறிவார்ந்த வளாகம்’ என்ற இலக்கை இந்தப் பல்கலைக்கழகம் நிர்ணயித்து இருக்கிறது. அதிநவீன மின்னிலக்கத் தொழில்நுட்பங்களால் உருப்பெறுகின்ற ஒரு புதிய உலகிற்குப் பொருத்தமானவர்களாக மாணவர்களை உருவாக்குவது அந்த இலக்கின் நோக்கம்.

அதையொட்டி இப்போது இந்தப் புதிய மூலாதார பாடத்திட்டம் நடப்புக்கு வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!