மாற்று ஏற்பாடுகளுடன் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்

வழக்கமாக சவுத் பிரிட்ஜ் சாலை, ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாளன்று 1,000க்கும் மேற்பட்டோர் தொழுகைக்காக திரள்வது வழக்கம். முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் இந்நாளில் மதிய உணவு சமைப்பது, குர்பான் ஆட்டிறைச்சியை விநியோகம் செய்வது போன்ற பணிகளில் சுமார் 100 தொண்டூழியர்கள் ஈடுபடுவர்.

இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தினால், இரண்டாம் கட்ட தளர்வின்படி சில கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் காலை 7.30 மணியிலிருந்து மூன்று தொழுகை நேரங்கள் இடம்பெறும். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அப்பள்ளிவாசலின் நிர்வாகக் குழுத் தலைவர் ‌ஷேக் ஃபக்ருதின் தெரிவித்தார்.

முன்கூட்டியே இதற்கு பதிவுசெய்ய வேண்டும் என்பதால் தொழுகைக்கான அனைத்து இடங்களும் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் முழுமையாக நிரப்பப்பட்டுவிட்டன என்று அவர் விளக்கினார்.
‘சேஃப்என்ட்ரி’ நுழைவு பதிவு முறையைப் பயன்படுத்துவது, சொந்த தொழுகைப் பாயைக் கொண்டு வருவது, ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு தொழுகையில் ஈடுபடுவது, பள்ளிவாசலுக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தனித்தனி வழிகளை ஒதுக்குவது போன்ற ஏற்பாடுகள் இன்று தொழுகையின்போது நடப்பில் இருக்கும்.

கொவிட்-19 நிலவரத்தைக் கருதி, இம்முறை குர்பான் சடங்குகள் ஆஸ்திரேலியாவில் இடம்பெறுவதால் ஆட்டிறைச்சி விநியோகம் அடுத்த வாரம்தான் இங்கு நடைபெறும் என்று திரு ஃபக்ருதின் சொன்னார்.வசதி குறைந்த குடும்பங்களுக்கு அதில் ஒரு பங்கினை ஒதுக்கிவிட்டு, குர்பான் சடங்கிற்கு முன்பதிவு செய்தோருக்கு அவர்களின் வீட்டிற்கு விநியோகிக்கும் சேவையும் அடுத்த வாரம் நடக்கும்.

“இவ்வாண்டு நோன்பு பெருநாள் அன்று பள்ளிவாசல்கள் திறக்கப்படவில்லை. இம்முறை யாவது பள்ளிவாசல்கள் தொழுகைக்கு திறக்கப்படுவது ஆறுதலாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் மக்கள் தொழுகையில் ஈடுபட அனுமதிக்கப்படுவதால், இதில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மனச்சங்கடம் ஏற்படுகிறது,” என்று கூறினார் திரு ஃபக்ருதின்.
பள்ளிவாசலில் காலை தொழுகையில் கலந்துகொள்ள முடியாதவர்களின் வசதிக்காக, காலை 7.30 மணிக்குத் தொடங்கும் தொழுகையின் நேரலையை அவர்கள் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“கிருமித்தொற்றால் வியாபாரங்கள் பாதிப்படைந்துள்ளன. பலர் வேலையும் இழந்துள்ளனர். இந்த சிக்கலான காலகட்டத்தை கடந்து வரவும் வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்பவும் இறைவனிடம் வேண்டுவோம்,” என்றார் திரு ஃபக்ருதின்.

ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் உட்பட 65 பள்ளிவாசல்களில் இன்று நடைபெறும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் சுமார் 8,790 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவராலும் பள்ளிவாசலுக்குச் செல்ல இயலாதது சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தொழில்நுட்பம் அதை ஓரளவு போக்குவதாக சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவர் திரு நசீர் கனி தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு நாம் அனைவரும் காலையில் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோம். ஆனால் தற்போது பள்ளிவாசல்களுக்குள் நுழைவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால் இந்த ஆண்டு பல குடும்பங்கள் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபடுகின்றன,” என்றார் திரு கனி, 61.

வீட்டில் தொழுகையை நடத்துவதற்கு குடும்பங்களுக்கு வழிகாட்டும் இணைய வளங்கள், சமய சொற்பொழிவுகள் ஆகியவற்றையும் பள்ளிவாசல்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வருவதாக திரு கனி கூறினார்.
“இது பலருக்குப் புதிய அனுபவம் என்பதால் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் அளவிற்கு பெரிதாகக் கொண்டாடப்படாவிட்டாலும் உற்றார் உறவினர்கள் இந்நாளிலும் ஒருவரை ஒருவர் காண்பது வழக்கம்.
“கொரோனா கிருமிப் பரவல் காரணமாக இந்த ஆண்டு குடும்ப ஒன்றுகூடல்கள் கண்டிப்பாகக் குறைந்து உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

இம்முறை சிங்கப்பூரில் குர்பான் சடங்கு நடத்தப்படாததால் இந்தியா, இலங்கை, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்படும் குர்பான் சடங்குகளுக்கு இங்கு உள்ளோர் நன்கொடை அளித்து அவர்களது சார்பில் குர்பான் கொடுக்கப்படும் ஆட்டிறைச்சி ஏழை எளியவர்களுக்குத் தானம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

“சிலர் தங்களது பூர்விக ஊர்களில் நடைபெறும் குர்பான் சடங்குகளுக்கு தனிப்பட்ட முறையில் பணம் அனுப்புவர். வேறு சிலர் பள்ளிவாசல் மூலமாக வியட்னாம், சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு இந்தச் சடங்கினை நிறைவேற்ற நன்கொடை செலுத்துவர்,” என்றார் திரு கனி.

இவ்வாண்டின் நிலைமை மாறுபட்டிருந்தாலும் ஹஜ்ஜுப் பெருநாளுக்குரிய தியாக மனப்பான்மைதான் முக்கிய அம்சம் என்றார் திரு கனி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!