$320 மில்லியன் நிதியை ஒதுக்கியது அரசாங்கம் நிறுவனங்களுக்கு கூடுதல் உதவி; வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடி நீட்டிப்பு

கொவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானம், கப்பல் பட்டறை, பதப்படுத்தும் தொழில் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர் செலவுகளைக் குறைக்க உதவியாக வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடி நீட்டிக்கப்படுவதுடன் கூடுதல் தள்ளுபடிகளும் வழங்கப்பட உள்ளன.

ஆதரவுத் தொகுப்பின் நீட்டிப்பாக, வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடியை ஈடுகட்ட $320 மில்லியன் ஒதுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட $1.36 பில்லியன் கட்டுமான ஆதரவுத் தொகுப்புடன், கூடுதலாக இந்த ஆதரவுத் தொகுப்பு இடம்பெறும்.

கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் பணிகளைத் தொடங்க முடியாததால், இந்தத் துறைகளைச் சேர்ந்த 15,000 நிறுவனங்களில் பெரும்பான்மையானவை தொடர்ந்து நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இந்த ஆதரவுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் கொவிட்-19 அறவே ஒழிக்கப்பட்டு, ஊழியர்கள் படிப்படியாக மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படும் வரை இந்த நிலைமை நீடிக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஜூன் மாதத்தில் செலுத்த வேண்டிய வெளிநாட்டு ஊழியர் தீர்வை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஜூலை மாதத்தில் செலுத்த வேண்டிய தீர்வையில் 50% தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது ​​ஆதரவுத் திட்டங்களின் நீட்டிப்பினால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைகளுக்கும் 100 விழுக்காடு தள்ளு படியை நிறுவனங்கள் பெறும்.

இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி, தொழில்துறை மேம்படும்போது படிப்படியாக அக்டோபரில் 75%, நவம்பர், டிசம்பர் மாதங்களில் 25% ஆக தள்ளுபடி குறைக்கப்படும்.

அத்துடன், வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வேலை அனுமதிச் சீட்டு அல்லது ‘எஸ்’ பாஸ் வைத்திருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் தீர்வையில் ஜூன் மாதம் $750 தள்ளுபடியும் ஜூலையில் $375 தள்ளுபடியும் கிடைக்கும். இது மேலும் நீட்டிக்கப்படுகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மேலும் இரண்டு மாதங்களுக்கு $375 தள்ளுபடியை முதலாளிகள் பெறுவர். ஜூன் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மாறுவதற்காக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்குமான $90 தள்ளுபடிக்குப் பதிலாக இத்தொகை வழங்கப்படுகிறது.

எனினும், வரும் அக்டோபர் முதல் 2021 டிசம்பர் வரை மாதத்திற்கு $90 தள்ளுபடியை நிறுவனங்கள் பெறும்.

இந்த கூடுதல் நடவடிக்கைகளை நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் அறிவித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, கட்டுமானம், கப்பல் பட்டறை, பதப்படுத்தும் தொழில் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு இது ஒரு சவாலான காலகட்டமாக உள்ளது என்பதைச் சுட்டினார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் ஊழியர்களிடம் கிருமி சோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் அவர்களது வெளிநாட்டு ஊழியர்கள் பலரால் வேலை செய்ய முடியவில்லை என்றார் அவர்.

“பணப் புழக்கம் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. நிறுவனங்களில் நிறைவுறாத பணிகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. மனிதவள அமைச்சு அவ்வப்போது விடுக்கும் ஆலோசனைக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் சரிசெய்துகொள்ள வேண்டி இருப்பதால் இத்தொழில்துறைகளில் உள்ள நிலவரம் வேகமாக மாறி வருகிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம், சிங்கப்பூர் கடற்துறை நிறுவனங்கள் சங்கம், பதப்படுத்தும் தொழில்துறை சங்கம் ஆகியவற்றின் கருத்துகளை அமைச்சு கேட்டறிந்துள்ளது.

ஊழியர் தங்கும் விடுதிகளை கொரோனா கிருமி பாதிப்பற்ற பகுதிகளாக ஆக்கும் முயற்சியில் அரசாங்கம் விரைந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன், கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பான முறையில் பணிகள் மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.

நிலைமை சீர்படுவதற்கு சிறிது காலம் ஆகலாம் என்ற அமைச்சர், தன்னால் முடிந்தவரையில் இத்துறைகளுக்கு உதவ அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!