புதிய சவாலில் இறங்கியுள்ள வான்குடை வீரர்கள்

இவ்வாண்டின் தேசிய தினத்தன்று ‘ரெட் லயன்ஸ்’ எனும் வான்குடைப் பிரிவு வீரர்கள் புதிய சவால் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றனர்.

வழக்கமாக, தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் இந்த வான்குடை வீரர்கள் தரையிறங்குவர்.

ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக இம்முறை மாற்று

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ரெட் லயன்ஸ்’ வான்குடை வீரர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பிரிவினர் செங்காங் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள திடலிலும் மற்றொரு பிரிவினர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள திடலிலும் தரையிறங்குவர்.

தரையிறங்கும் இடம் மட்டுமின்றி விமானத்திலிருந்து குதிக்கும் உயரமும் வேறுபடுகிறது.

2018ஆம் ஆண்டில் 3,810 மீட்டர் உயரத்திலிருந்து வான்குடை வீரர்கள் குதித்தனர்.

ஆனால் இம்முறை 1,524 மீட்டர் உயரத்திலிருந்து அவர்கள் குதிக்கின்றனர்.

இதனால் வானத்தில் வழக்கமாக அவர்கள் செய்யும் சாகசங்கள் ஏதும் இருக்காது.

மாறாக, விமானத்திலிருந்து குதித்ததும் வான்

குடையை விரித்து தேசிய கொடியையும் தேசிய தின பதாகைகளையும் ஏந்திக்கொண்டு அவர்கள் நேராக தரையை நோக்கி வருவார்கள்.

இதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.

பாவனைப் பயிற்சிக் கூடத்திலும் வீரர்கள் பயிற்சி

செய்துள்ளனர்.