சுடச் சுடச் செய்திகள்

‘நாளை நமதே’ நம்பிக்கை முழக்கமிடும் இசைக் கலைஞர்கள்

இந்து இளங்கோவன்

 

இன்றைய தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் இடம்பெறும் சிங்கப்பூரின் தமிழ்க் கலைஞர்களான முகம்மது ரஃபி, யங் ராஜா, ஷபீர், ஏபி சிமோன், ரா.சுதா‌ஷினி ஆகியோர் இந்த கிருமிப் பரவல் நெருக்கடி காலத்தில் சிங்கப்பூர் மக்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொண்டு வருவதே தங்கள் நோக்கம் எனக் கூறினர்.

‘நாளை நமதே’, ‘முன்னேறு வாலிபா’ ஆகிய தமிழ் பாடல்களை முகம்மது ரஃபி பாட, துள்ளலும் துடிப்பும் நிறைந்த யங் ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் ‘ராப்’ இசையால் அசத்தவிருக்கிறார்.

“பழமையும் புதுமையும் கலந்த அம்சங்களை கொண்ட பாடல் அங்கமாக இது விளங்கும். எளிமையான சொற்களை பயன்படுத்தி ‘ராப்’ செய்து, வீட்டிலிருந்து நிகழ்ச்சியைப் பார்க்கும் சிங்கப்பூரர்களை உணர்வுபூர்வமாக சென்றடைய விரும்புகிறேன்,” என்றார் யங் ராஜா.

‘சிங்கை நாடு’ என்ற தேசிய தின தமிழ் பாடலுக்கு சொந்தக்காரரான பிரபல உள்ளூர் இசையமைப்பாளர் ‌‌ஷபீர் தபாரெ ஆலம், தாமே உருவாக்கிய பாடலை தேசிய தின அணிவகுப்பில் பாடுவது இதுவே முதல்முறை.

இம்முயற்சிக்கு நடிகையும் பாடகியுமான குமாரி ஏபி சிமோன் கைகொடுத்துள்ளார்.

இவர்கள் சேர்ந்து பாடும் ‘டுகேதர்’ என்ற ஆங்கில பாடல், சவால்மிக்க சூழலில் சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் க‌‌ஷ்டங்களை வெளிப்படுத்துவதோடு அதனை வெற்றிகரமாக கடந்து வருவோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

“நம் பலவீனங்களை ஒத்துக்கொள்ளும்போதுதான் நம்மால் பலமடைய முடியும். இது நமக்கு சிரமமான காலம் என்பதை ஒத்துக் கொள்ளும்போதுதான் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றி யோசிக்கமுடியும்,” என்று தம் பாடலின் கருப்பொருளை விளக்கினார் திரு ஷபீர்.

“இப்பாடல் மக்களின் தொண்டு, பரிவு, பகிர்வு மனத்தை வெளிக்கொணரும்,” என்றார் அவர்.

தேசிய தின அணிவகுப்பில் பாடுவது குமாரி ஏபி சிமோனுக்கு இது முதல் அனுபவம்.

எத்தனையோ மேடைகளில் பாடியிருந்தாலும் நாட்டிற்காக பாடுவதே ஒரு பாடகருக்கு கிடைக்கும் ஆகச் சிறந்த அங்கீகாரம் என்று ஏபி சிமோன் கருதுகிறார்.

“கொவிட்-19 சமயத்தில் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும்,” என்றார் அவர்.

இளம் பாடகியான ரா.சுதா‌ஷினி அணிவகுப்பு நிகழ்ச்சியின் படைப்பாளராக புதிய பரிமாணம் எடுத்துள்ளார்.

“ஒவ்வொரு படைப்பாளருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அதே சமயம் மற்ற படைப்பாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சி படைக்கும்போது, அவர்களது பாணியை புரிந்துகொண்டு செயல்படுவது மிகவும் முக்கியம். அதற்கு கடுமையாக பயிற்சி செய்துள்ளேன்,” என்றார் சுதா‌ஷினி.

கொவிட்-19 நிலவரத்தை கருதி, இவ்வாண்டின் தேசிய தின அணி வகுப்பின் நிகழ்ச்சி அங்கம் முதல் முறையாக உள்ளரங்கில் நடக்கிறது.

ஸ்டார் பர்வோமிங் ஆர்ட்ஸ் செண்டரில் இன்றிரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் மொத்தம் 87 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

சிங்கப்பூரர்கள் ஐக்கியமாக கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகள் எல்லாம் கதையாக இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

கூடுதல் செய்தி:

ப.பாலசுப்பிரமணியம்

எஸ்.வெங்கடே‌ஷ்வரன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon