சுடச் சுடச் செய்திகள்

புதிய முத்திரை கொண்ட பொருட்கள் அறிமுகம்

அனைத்துலகச் சந்தையில் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சிங்கப்பூர் முத்திரை அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர். நவம்பர் மாதத்தில் உணவு மற்றும் பானம், அழகு பராமரிப்பு, வீட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்களுக்கு முதலில் சிங்கப்பூர் முத்திரை அறிமுகப்படுத்தப்படும்.

சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது சிங்கப்பூர் முத்திரை மூலம் தரச்சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தனித்தன்மையுடன் விளங்கும். உள்ளூர் உணவு உற்பத்தி நிறுவனமான கேஎச் ராபர்ட்சுக்குச் சென்று பார்வையிட்ட பிறகு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் திரு சான் பேசினார்.

தரத்தில் கவனம் செலுத்துவதே உணவுத் துறையில் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் பிரதான அம்சமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

“உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது பயனீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிக்கவும் அவற்றை வாங்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாங்கள் துரிதப்படுத்துவோம். இது சிங்கப்பூர் சந்தைக்கு மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைக்கும் பொருந்தும்,” என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

சிங்கப்பூர் முத்திரை குறித்தும் அதுதொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்தும் கூடிய விரைவில் தகவல் வெளியிடப்படும் என்றார் அவர்.

“சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை உயர்த்துகிறோம். இதனால் பொருட்களின் சந்தையை விரிவுப்படுத்துவது மட்டுமின்றி நமது உள்ளூர் உணவு மீள்திறனுக்கும் வலுசேர்க்கிறோம்,” என்றார் திரு சான்.

உணவு உற்பத்தி மற்றும் சேவைத் துறை சிங்கப்பூரின் முக்கிய தூணாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு சான் கூறினார். உணவுச் சேவைத் துறையில் 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. சிங்கப்பூரின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு 0.8 விழுக்காடாகும். இத்துறையில் 180,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

உணவு உற்பத்தித் துறையில் 940க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு 1.1 விழுக்காடாகும். இத்துறையில் 48,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு சிங்கப்பூரின் உணவு உற்பத்தித் துறை சீரான முறையில் வளர்ச்சி கண்டு வந்ததை திரு சான் சுட்டினார். 2013ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை அதன் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 6.45 விழுக்காடாகப் பதிவானது.

கொரோனா நெருக்கடிநிலையிலும் அத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாக திரு சான் தெரிவித்தார்.

“ஆசியாவில் நடுத்தர வர்க்க மக்களுக்கான சந்தை வளர்ந்து வருகிறது. அதனால் மற்ற தரமான உணவுக்கான தேவையுடன் தரமான மற்ற பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது,” என்று திரு சான் கூறினார்.

இது சிங்கப்பூருக்குச் சாதகமாக அமையும் என்று தெரிவித்த திரு சான், உணவுத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். ஆய்வு, மேம்பாட்டு முயற்சிகளின் வழி உலகளாவிய நிலையில் சிங்கப்பூர் முக்கிய பங்காற்றலாம் என்றார் திரு சான்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon