இணையத்தில் பொருட்கள் ஏலம்; அசத்தும் தம்பதி

கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருந்தபோது கடைகள் பலவும் மூடப்பட்டிருந்தன. ஆனால், ‘லஸாடா’, ‌‌‌‘ஷாப்பி’ போன்ற பிரபல இணைய விற்பனைத் தளங்களில் வியாபாரம் சூடுபிடிக்க, சமூக ஊடகங்களிலும் ஏலத்தில் பொருட்களை விற்பதில் பலர் ஈடுபடத் தொடங்கினர்.

மோட்டார் வாகனத் துறையில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றும் 33 வயது வில்சன் பால் டேவிட், ஏலத்தில் ஆர்வம் ஏற்படவே, ‘இதை செய்துதான் பார்ப்போமே’ என்று களத்தில் இறங்கினார். ஃபேஸ்புக்கில் நடைபெறும் ஏலத்தில் பொருட்கள் விற்பதற்காக, சக நண்பர்களுடன் இணைந்து தொடக்கத்தில் சுமார் $600 மதிப்பிலான மின்னிலக்கப் பொருட்களை இவர் வாங்கினார்.

இதில் என்ன சுவாரசியம் என்றால், ‘அமேஸான்’ விற்பனைத் தளத்திலிருந்து ஏலத்திற்காக வரவழைக்கப்படும் பொருட்களை இவரால் தேர்ந்தெடுக்க முடியாது.

ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கும் இந்த மின்னிலக்கப் பொருட்கள், விலை மதிப்பிற்கேற்ப வேறுபட்டிருக்கும். இவை பெரும்பாலும் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்களால் விற்பனைக்கு நிராகரிக்கப்பட்டவை. உதாரணத்திற்கு, விற்பனைக்கு விடப்படவிருந்த பொருளின் ெபாட்டலமிடுதலில் ஒரு சிறிய கீறல் அல்லது நசிவு ஏற்பட்டால்கூட அது நிராகரிக்கப்பட்ட பொருளாக கருதப்படும். ஆனால் அப்பொருளில் எந்தக் கோளாறும் இருக்காது என்று பால் தெளிவுபடுத்தினார்.

இணையத்தில் பொருட்களை ஏலத்திற்கு விடுபவர், பொருள் விவரத்தை நன்கு அறிந்திருப்பது முக்கியம் என்று வலியுறித்திய பால், தாம் விற்கும் மின்னிலக்கச் சாதனங்கள் ஒழுங்காக செயல்டுகின்றனவா என்பதைச் சோதித்த பிறகே அவற்றை ஏலத்திற்கு விடுவாராம்.

ஏலம் தொடங்குவதற்கு முன், விற்கப்படவிருக்கும் பொருட்களைக் கைபேசி கேமராவுக்கு முன்னால் கச்சிதமாக அடுக்கிவைத்து, விற்பனைக்கு ஏற்ற சூழலை உருவாக்க, பின்னணியில் அலங்கரிப்பு விளக்குகளை பொருத்தி துடிப்பான இசையையும் இவர் ஒலிபரப்புவார்.

‘இடன்டெக் ஆக்‌‌ஷன்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏலத்தைத் தொடங்கியதும் முதலில் குறைந்த விலை மதிப்புடைய பொருட்களை ஏலத்திற்கு விட்டு பிறகு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, விலை மதிப்புள்ள பொருட்களை பால் அறிமுகம் செய்வார்.பொருளின் மதிப்பைப் பொறுத்து, ஏலத்தின் தொடக்க விலை $0யில் இருந்து $15 வரை இருக்கும். ஃபேஸ்புக் பதிவில் அப்பொருளுக்கான ஆக அதிக விலையைப் பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு அது விற்கப்படுகிறது.

ஏலத்தின்போது ஆங்கிலம், தமிழ், மலாய் ஆகிய மொழிகளில் துடிப்புடன் பால் ஒவ்வொரு பொருளின் செயல்பாட்டையும் விளக்கி ஏலத்தில் விற்க முற்படுவார். பின்னணியில் அவரது மனைவி நிக்கோல் விக்டோரியா, 32, மடிக்கணினியில் வாடிக்கையாளர்களின் பதிவுகளைக் கண்காணிப்பார். வாடிக்கையாளர்களிடம் கட்டண விவரங்களை அனுப்பி பொருளை அவர்களிடம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்வார்.

இணையத்தில் பொருட்களை ஏலத்திற்கு விடுவது எளிது என்று பலரும் நினைப்பது உண்டு. ஆனால் சகிப்புத்தன்மை இல்லையென்றால் இந்த வேலையைச் செய்ய முடியாது என்றார் பால்.

உதாரணத்திற்கு, தாம் விரும்பும் பொருள் ஏலத்திற்கு விடப்படுகிறதா என்று வாடிக்கையாளர் கேட்டுவிட்டு பின்னர் பொருள் அறிமுகமாகும்போது ஏலத்திலிருந்து விலகுவது இயல்பு என்று பால் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அதோடு, பொருளை வாங்க எண்ணம் கொண்டிடாத பார்வையாளர்கள் தேவையில்லாத கேள்விகளை எழுப்பி, பொருளைப் பிறர் குறைவாக மதிப்பிடும் அபிப்பிராயத்தை உண்டாக்கும் கருத்துகளைப் பதிவுசெய்யும்போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி விற்பனை செய்வது தமக்கு பெரும் சவாலாக உள்ளதாக பால் சொன்னார்.

நான்கு மணி நேரம் வரை நீடிக்கும் இந்த ஏலத்தில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்றும் உற்சாகம் குறையாமல் பொருட்களை விற்க முனைவதில்தான் தமது முழுக் கவனமும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார் ஏலத்தைப் பகுதி நேரமாக நடத்தும் பால்.

ஏலம் நடைபெறும் அதே ஃபேஸ்புக் பக்கத்தில் மற்ற நாட்களில் தோடுகளையும் ஆபரணங்களையும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்கும் திருமதி நிக்கோல், வாடிக்கையாளரிடம் ஒரே பொருளை பலமுறை காட்ட வேண்டியிருப்பதால், விற்பனை செய்வதற்குப் பொறுமை தேவைப்படுவதாகக் கூறினார். சில பொருட்களை ஏலத்தில் விற்கமுடியாத பட்சத்தில், மற்ற பொருட்களை விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

இவ்வாண்டின் முதற்பாதியில் ஏலத்தைத் தொடங்கியபோது நல்ல லாபம் கிடைத்ததாக கூறிய பால், கொவிட்-19 தொடர்பான இரண்டாம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டவுடன் ஏலத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகச் சொன்னார்.

“ஏலம் சிறப்பாக நடைபெற்ற மாதத்தில் $800 வரை லாபம் கிடைத்தது. எனினும், கடைகள் திறக்கப்பட்டதோடு இணைய விற்பனைத் தளங்கள் கொடுக்கும் போட்டியின் காரணமாக நாளடைவில் லாபம் குறைந்துவிட்டது,” என்று கூறிய பால், ஏலம் நடத்துவதைக் குறைத்துக்கொண்டுள்ளார்.

பொருட்களை ஏலமிடும் மற்ற விற்பனையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து பொருட்களை விற்கும் முயற்சியில் தற்போது பால் ஈடுபட்டு வருகிறார்.

பொழுதுபோக்காக ஏலத்தை நடத்தும் பால்-நிக்கோல் தம்பதி, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏலத்தில் கலந்துகொண்டு தங்களுக்கு ஆதரவளிப்பது இவர்களுக்கு உற்சாகம் தருகிறது.

“ஏலத்தில் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கி திருப்தி அடையும்போது, தொடர்ந்து இதில் ஈடுபட வேண்டும் என்ற உற்சாகம் கிடைக்கிறது.

“உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததோடு வாடிக்கையாளர்களை மகிழ்வித்த திருப்தியும் கிடைக்கிறது,” என்று கூறினார் பால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!