சுடச் சுடச் செய்திகள்

(காணொளி) ஃபேர்பிரைஸ் கடையில் வாழைப்பழம் சாப்பிட்ட வௌவால்; மன்னிப்புக் கோரியது கடை

ஜூரோங் ஈஸ்டில் இருக்கும் 24 மணிநேர என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் வௌவால் ஒன்று வாழைப்பழங்களைச் சாப்பிடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அந்தச் சம்பவத்தின் தொடர்பில் பேரங்காடி மன்னிப்பு கோரியுள்ளது.

எண் 345 ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 31ல் உள்ள அந்தக் கடையில் நிகழ்ந்த சம்பவம் பற்றி அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டது ஃபேர்பிரைஸ்.

ஆனால், அந்தக் காணொளி பதிவான நாள், நேரம் பற்றி தெளிவாகத் தெரியவில்லை.

“இத்தகைய சம்பவம் மீண்டும் நிகழாதிருக்கும் பொருட்டு, அனைத்து பழங்களும் கடைக்குள் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பழங்கள் அப்புறப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.

அந்த வட்டாரத்தில் வௌவால்கள் தென்படுவதற்கான காரணம் பற்றி ஆராயுமாறு அதிகாரிகளை ஃபேர்பிரைஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் பொதுவாக, குடியிருப்புப் பகுதிகளில்கூட, காணப்படக்கூடிய நாய் முகம் கொண்ட பழந்தின்னி வௌவால் அது என்று ஏக்கர்ஸ் அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் தெரிவித்தார்.

கடந்தமாதம் அப்பர் பூன் கெங் ரோட்டில் இருக்கும் புளோக் 14ல் சில வீடுகளுக்குள் வௌவால்கள் சென்றன. அந்தப் பகுதிக்கு வௌவால்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கில் அங்கிருந்த பழ மரக்கிளைகள் வெட்டப்பட்டன. 

கொரோனா தொற்றுக்குக் காரணமான Sars-CoV-2 வௌவால்கள் மூலம் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் வௌவால்கள் தொடர்பான புகார்கள் இந்த ஆண்டில் அதிகம் பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆனால், சிங்கப்பூரில் இருக்கும் வௌவால்கள் கொவிட்-19 தொற்றைப் பரப்புவதில்லை என நிபுணர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon