புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றின் கூரை மீது அமர்ந்து, பின் நடந்துகொண்டிருந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்த ஸ்டோம்ப் வாசகர் ஜூலி, பேருந்து நிறுத்தக் கூரை மீது ஆடவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். பின்னர் எழுந்து அந்த ஆடவர் கூரையின் மீது நடந்தார். இதைப் புகைப்படமாகவும் காணொளியாகவும் பதிவு செய்த ஜூலி, போலிசுக்குத் தகவல் அளித்தார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட மற்ற சில காணொளிகளில் அந்த ஆடவர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்காமல் கூரையின் மீது உருள்வதைக் காண முடிந்தது.
அந்த ஆடவரை குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் கூரையிலிருந்து அப்புறப்படுத்துவதைக் காட்டும் காணொளியும் வெளியானது.

அதிகாரிகள் அந்த ஆடவருடன் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் உரையாடி பின்னர் அவரை அங்கிருந்து அகற்றியதாகக் கூறப்பட்டது.
அந்த 29 வயது ஆடவர் மனநல (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.