ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் ராபின்சன்ஸ் கடை அமைந்திருந்த இடத்தை இப்போது இணைய சில்லறை விற்பனை நிறுவனமான லஸாடா தன்வயப்படுத்தி இருக்கிறது.
அந்த 10,000 சதுர அடி பரப்பளவிலான தற்காலிகக் கடையில் அடுத்த இரு வாரங்களுக்கு வீட்டு அலங்காரப் பொருள்களையும் விவேக வீட்டு உபயோகப் பொருள் களையும் லஸாடா காட்சிப்படுத்தி உள்ளது.
இணையம் வழியாக விற்பனை செய்துவரும் லஸாடா, தற்போது நேரடி விற்பனைச் சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது. இது குறுகிய காலத்திற்குத்தான் என்றாலும், இந்த நடவடிக்கையால் அதிகமான வாடிக்கையாளர்கள் கடைத்தொகுதிகளுக்கு ஈர்க்கப்படுவர் என்றும் அவர்களுக்கு அதிகமான தெரிவுகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அந்தத் தற்காலிகக் கடை அமைந்துள்ள இடத்தை லஸாடா நிரந்தரமாக வாடகைக்கு எடுத்துக்கொள்ளுமா எனக் கேட்டதற்கு, நிறுவனங்களிடம் இருந்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் கிடைக்கும் ஆதரவை அறியும் நோக்கில் முன்னோட்ட முயற்சியாக அந்தத் தற்காலிகக் கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று லஸாடா பேச்சாளர் தெரிவித்தார்.
இம்மாதம் 2ஆம் தேதி அந்தக் கடை திறக்கப்பட்டது முதல், பங்கேற்கும் வணிகச் சின்னங்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் சொன்னார்.
சாம்சுங், ஃபிலிப்ஸ், டெஃபல் உட்பட வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் அக்கடையில் தங்களது தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளன. நேரடி விற்பனைக் கடைகள் இல்லாத வணிகச் சின்னங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த வாய்ப்பு வழங்கவும் இலக்கு கொண்டுள்ளதாக லஸாடா குறிப்பிட்டது.
முன்னதாக, மற்ற மின்வணிகத் தளங்களும் நேரடி விற்பனைச் சந்தையில் அடியெடுத்து வைத்தன. 'தாவ்பாவ்' மின்வணிகத் தளம், 2019 செப்டம்பர் முதல் 2020 செப்டம்பர் வரை ஃபூனான் கடைத்தொகுதியில் அறைகலன்களையும் ஆடைகளையும் விற்கும் கடையை நடத்தியது. கொரிய அழகுசாதன விநியோகிப்பாளரான 'விர்விசி'யுடன் இணைந்து 'ஷாப்பி' தளம் ஆறு மாதங்களே செயல்படும் நேரடி விற்பனைக் கடையை கடந்த அக்டோபரில் அந்தக் கடைத்தொகுதியில் திறந்தது.