பார்வைத்திறன் குறைபாடுடைய முதியவருக்கு உதவிய இந்திய ஊழியருக்கு பாராட்டு

நில ஆய்வு உதவியாளரான குணசேகரன் மணிகண்டன், ஏப்ரல் 18ஆம் தேதி அங் மோ கியோ அவென்யூ 6ல் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது பார்வைத்திறன் குறைபாடு உடைய முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க நீண்ட நேரம் காத்துக்கொண்டு இருந்ததை திரு குணசேகரன் கவனித்தார்.

“மருத்துவரைக் காண வேண்டும் என்று அங்கிள் என்னிடம் கூறினார். அங்கிருக்கும் பலதுறை மருந்தகத்திற்கு அவரை நான் அழைத்துச் சென்றேன்,” என்று தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது குணசேகரன் கூறினார்.

தம்முடைய கனிவன்புமிக்க இந்தச் செயல் காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வேகமாகப் பரவும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பொதுமக்களில் ஒருவர் திரு குணசேகரனின் இச்செயலைக் காணொளி பதிவு செய்தார். Roads.sg எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் அக்காணொளி வேகமாகப் பரவியது. இதுவரை அக்காணொளி 280,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையும் பராமரிப்பும் வழங்கும் ஈடுபாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் திரு குணசேகரனை அடையாளம் கண்டு அவரிடம் நன்றிகூறும் விதமாக அன்பளிப்பு வழங்கியதாக மனிதவள அமைச்சு கடந்த புதன்கிழமை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் அமைக்கப்பட்ட ‘ஏஸ்’ பிரிவு, நற்செயல்களைப் புரியும் வெளிநாட்டு ஊழியர்களிடம் அவ்வப்போது இத்தகைய அன்பளிப்புப் பைகளை வழங்கி வருகிறது.

தமக்குக் கிடைத்த அன்பளிப்பைக் கொண்டு என்ன செய்தார் என்று திரு குணசேகரனிடம் கேட்கப்பட்டதற்கு, “எனது நண்பர்களுடன் அதை நான் பகிர்ந்தேன்,” என்று பதிலளித்தார்.

தாம் நற்செயல் புரிந்த அந்தக் காணொளியைக் கண்டு தாயகத்தில் உள்ள தமது பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் தம்மை நினைத்து பெருமை கொண்டதாக திரு குணசேகரன் கூறினார்.

அந்த முதியவர் சாலையைக் கடக்க உதவியதால் தாம் வேலைக்குச் செல்ல சற்று தாமதம் ஏற்பட்டாலும், இதுபோன்ற நற்செயல்களைத் தாம் மீண்டும் புரியத் தயார் என்றும் திரு குணசேகரன் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!