சிங்கப்பூரின் பன்முக மரபுடைமைகளைப் பறைசாற்றும் விழா

தேசிய மரபுடைமைக் கழகம் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யும் சிங்கப்பூர் மரபுடைமை விழா (Singapore HeritageFest) பல மரபுடமைகளையும் கலாசாரங்களையும் கொண்ட சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர் மரபுடைமை விழா தனிப்பட்டவர்கள், குழுக்கள், சமூகங்களுடன் இணைந்து பலதரப்பட்ட நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் பார்வையிடவும் வழங்குகிறது. இதன் மூலம் அதிகம் அறியப்படாத கதைகளைத் தெரிந்துகொண்டு நாம் அனைவருடைய மரபுடைமைகளையும் காக்க சிங்கப்பூரர்களுக்கு வழிவகுக்கிறது. முதல் விழா கடந்த 2004ல் நடந்தேறியது.

ஒவ்வோர் ஆண்டும் இந்த விழா சிங்கப்பூரின் வெவ்வேறு மரபுடைமை அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. அதன்வழி இம்முறை சீக்கிய சமூகம், யுரேசியர் சமூகம் ஆகியவற்றின் சிறப்பம்சங்களைச் சிங்கப்பூர் மரபுடைமை விழா உங்களுக்கு வழங்குகிறது. சிங்கப்பூர் மரபுடைமை விழா நிகழ்ச்சிகளை https://www.sgheritagefest.gov.sg/ எனும் இணையத்தளத்தில் காணலாம்.

சிங்கப்பூரின் சீக்கிய சமூகம்

சீக்கியர்கள் 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்திறங்கினர் என்று பதிவுகள் காட்டுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் துணை ராணுவத்தினராக அவர்களில் பெரும்பான்மையோர் இங்கு வந்தனர். ராணுவ சேவை சீக்கியர்களுக்கு விருப்பமான ஒன்றாக திகழ்ந்தது.

சிங்கப்பூர் நீரிணைக் குடியிருப்பு காவல் துறையின் பரிந்துரையின்படி, 1881ஆம் ஆண்டில் 165 சீக்கியர்கள், பிரிட்டிஷ் இந்திய மாநிலமான பங்சாப்பிலிருந்து சிங்கப்பூர் தீவினை வந்தடைந்தனர். அவர்கள் ஒரு புதிய காவல் துறையின் முதுகெலும்பாக அமைந்திட வரவழைக்கப்பட்டனர். இதுதான் சீக்கியர்கள் குறிப்பிடத்தக்க முறையில் சிங்கப்பூருக்கு வந்ததற்கான முதல் பதிவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பாதியில் சிங்கப்பூருக்கு வந்த சீக்கியர்கள் பலர் உள்ளூர் காவல் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் சேவையாற்றினர்.

இந்த முன்னோடிகள் தான், அதனைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு அதிக எண்ணிக்கையில் வருவதற்கான பாதையினை சீக்கியர்களுக்குத் திறந்து வைத்தனர். ஆரம்ப காலத்தில் சிங்கப்பூரில் பணி புரிந்து பின்னர் விடுமுறைக்காக பஞ்சாப் திரும்பிய பலர் இங்குள்ள வாய்ப்பு வசதிகளைப் பற்றி உற்சாகமாக விவரித்து வந்தனர். அவர்களது கதைகளைக் கேட்ட பல கிராமங்களைச் சேர்ந்தோர், முன்னோடி சீக்கியர்களைப் பின்தொடர்ந்து சிங்கப்பூருக்கு வந்திறங்கினர். இவர்களில் பெண்கள், முழு குடும்பங்கள் ஆகியோரும் அடங்குவர். இதன்படி பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஏறக்குறைய ஒரு சிறிய சீக்கிய சமூகம் நிரந்தரமாக சிங்கப்பூரில் வேறூன்றியது. காவல்துறை அதிகாரிகள், பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்களாக அவர்களில் பெரும்பாலானோர் பணியமர்த்தப்பட்டனர். அதேநேரம், சீக்கியர்களில் பால்காரர்களும் நகரின் எல்லைப் பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வந்த எருமை வண்டி ஓட்டுனர்களும் அடங்குவர்.

சீக்கிய சமயக் கூறுகள்

சீக்கிய சமயத்தின் மூன்று கூறுகள்

  1. வந்தே கி ஷக்னா என்பது அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுதல்

  2. கீர்த் கர்ணி என்பது நேர்மையான வாழ்க்கை

  3. நாம் ஜப்னா என்பது இறைவனை தியானித்தல்

இந்த மூன்று கூறுகளும் அனைத்து சீக்கியர்களின் வாழ்விலும் நிறைந்திருக்கும். அவர்களது தனிப்பட்ட, நிபுணத்துவ வாழ்க்கை முறைகளில் அமைந்துள்ள அடிப்படை கடமைகளாக சமூகத்தின் நலனுக்காக சேவையாற்றும் பண்புகளை இவை உறுதிசெய்யும்.

ஒவ்வோர் இனக் குழுவும் தேசத்துடன் முன்னேறி வந்துள்ளன, சீக்கியர்கள் உள்பட. சீக்கியர்களின் எண்ணிக்கை சிறிதானாலும் ஒன்றுபட்ட பல இன மக்களாக தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் வாய்ப்பின் பயனால் அவர்கள் தனித்தன்மையான வகையில் முக்கியமான பல துறைகளில் நற்சேவையாற்றியுள்ளனர். மேல்நிலைக் கல்வித் துறை, வர்த்தகம், கல்விப் பயிற்சி, சட்டம், மருத்துவம், சீருடைச் சேவைகள் மற்றும் பல நிபுணத்துவச் சேவைகளை குறிப்பிடலாம். பாரபட்சத்துடன் நடத்தப்படாமல், அழுத்தப்படாமல், தங்களது சுய முயற்சியாலும் திறமைகளாலும் வெற்றியடைக்கூடிய சீக்கிய சமுதாயத்துக்கும் சிங்கப்பூரின் செயல்முறைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆன்மிக, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குருத்துவாரா

சமுதாயத்தின் ஆன்மீகம் மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்வது குருத்துவாரா என்ற சீக்கிய கோயில்கள். சமயத் தலைவர்களால் பக்தர் கூட்டத்திற்காக தினசரி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மிகவும் முக்கியமான விழாவான வைசாக்கி, பெரும் பக்தர்கள் கூட்டத்தை கோயிலுக்கு அழைத்து வருகின்றது. லங்கர் எனப்படும் அன்னதானம் தினசரி பரிமாறப்படுகின்றது. அனைவருக்கும் சமமான முறையில், இலவச சமையலறை என்ற ஆணிவேறான தத்துவம் சீக்கிய சமயத்தின் மூலக் கருவாகும். அதன்படி, அனைவரையும் அரவணைக்கும் தன்மையும் ஒற்றுமையும் பிரநிதிக்கப்பட்டு வலியுறுத்தப்படுகின்றன. அனைவரும் குருத்துவாராவில் உண்பதற்கென லங்கர் எனப்படும் சைவ உணவு தயாரிக்கப்படுகின்றது.

இளம் சீக்கிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள்

இளம் சீக்கிய கூட்டமைப்பு இளையோர்கள் மற்றும் முதியோர்கள் உள்ளடங்கிய சீக்கியர்கள், சீக்கியர் அல்லாதவர்கள் என அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் இலக்குடன் செயலாற்றுகின்றது. கலாசாரம், சமூக சேவை, கலந்துரையாடல்கள், மாநாடுகள், விளையாட்டு, நிபுணத்துவ மேம்பாடு போன்ற சமுதாயத்தின் ஆணிவேறாகிய அங்கங்களுடன் பற்பல நடவடிக்கைகளுக்கு அடித்தளங்கள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இளம் சீக்கிய கூட்டமைப்பினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் ஒன்று இன ஒற்றுமை காற்பந்து போட்டி. கடந்த 2019ம் ஆண்டு, வரலாறு காணாத வகையில் 84 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்றன. பொதுவான விளையாட்டுகள் மூலம் ஒருங்கிணைந்து, சிங்கப்பூரில் உள்ள மற்ற குழுக்களைப் பற்றி பங்கேற்கும் குழுக்கள் அறிந்துகொள்கின்றனர். இந்த போட்டிகளின்போது மற்ற ஒருங்கிணைக்கும் உபரி நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன. அதன்வழி தொடர்புகளை மேம்படுத்தி, உறவுகளை வளர்த்து, சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இவ்வகைப் போட்டிகள் வழிவகை செய்கின்றன.

மிகவும் அண்மையில் இளம் சீக்கிய கூட்டமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையுடன் இணைந்து ஒரு காணொளியைத் தயாரித்தது. ‘த சீக் ரோட்‘ என்ற தலைப்பில் இந்தக் காணொளி சீக்கிய சமூகத்தின் பலதரப்பட்ட பண்புகளை பிரதிபலிக்கின்றது. சிங்கப்பூரில் சீக்கிய சமூகத்தின் வரலாறு, எப்படி அச்சமூகம் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு தங்களுக்கென்று இருந்த வளங்களை பயன்படுத்தி வளர்ச்சி கண்டது பற்றிய விவரங்களை அதில் காணலாம். மேலும் நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் இருக்கக்கூடிய சவால்களை எவ்வாறு ஏற்று நடக்கப்போகின்றது போன்ற கருத்துகளும் உள்ளடங்கும். உதாரணமாக சிங்கப்பூரில் வாழும் இளம் சீக்கியர்கள் அவர்களது அடையாளத்தையும் கலாசாரத்தையும் எப்படி பாதுகாத்துக்கொள்வார்கள் போன்ற எண்ணங்களை காணொளி ஆராய்கின்றது. சிங்கப்பூரின் இதர சமுதாயங்களும் சீக்கிய சமூகத்தைப் பற்றி புரிந்துகொள்ளவும் இந்த காணொளி ஒரு சிறந்த ஆராய்ச்சிப் பதிவாக உதவும்.

சீக்கிய சமயமும் உணவும்

குருத்துவாராவில் லங்கர் என்ற உணவு பரிமாறுதல் முக்கிய மைய நடவடிக்கையாகும். வருகையாளர்களும் கோயிலில் தொண்டூழியம் செய்வோரும், சீக்கிய பக்தர்களும் ஒன்றிணையும் நிகழ்வாக அது திகழ்கின்றது. லங்கர் உணவை தயாரித்தல், பரிமாறுதல், சேவையாற்றுதல் என்று பரிமாணங்களில் அனைவரும் ஒன்று சேர்கின்றனர். சமூகத்தினருடன் கலந்துறவாடி, திறன்களை வளர்த்துக்கொண்டு செயல்பட இளையோர்களுக்கு லங்கர் உதவுகின்றது, அவர்களும் ஆர்வத்துடன் அவற்றில் பங்கேற்கின்றனர். சமூகத்தின நன்கொடைகளைக் கொண்டுதான் லங்கர் சேவை நடத்தப்படுகின்றது. குருத்துவாராவுக்கு வருகை தரும் அனைவருக்கும் ஒட்டுமொத்த சீக்கிய சமூகமும் வழங்கக்கூடிய சேவையாக ஆலயங்கள் அமைகின்றது. ஒரு குருத்துவாராக்கு வருகை தரும் அனைவரும் லங்கர் மாளிகை என்ற இடத்தில் பொதுவாக ஒன்றுகூடி உணவருந்துவர். இது ஒருவரின் பின்புலத்தைப் பொருட்படுத்தாது அனைவரும் ஒருவர் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகும். சீக்கிய சமூகம் அனைவரையும் உள்ளடக்கியது என்பதை உறுதி செய்யும் வகையில் யாவரும் உண்ணும் நோக்கத்துடன் லங்கர் உணவு சைவ முறையில் தயார்செய்யப்படுகின்றது.

சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் சீக்கிய கஜர் அல்வா

இந்த ஆண்டின் சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் சீக்கிய சமூகம் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளைப் பற்றிய ஒரு சமையல் காணொலிக்கு ஏற்பாடு செய்துள்ளது இளம் சீக்கிய கூட்டமைப்பு. இவ்வாண்டின் சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் இளம் சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் திரு சரப்ஜீட் சிங், அவரது தாயார் இருவரும் இணைந்து, சமையல் நிபுணர் திரு சாரா பென்ஜமின் ஹுவாங்குடன் காலா சன்னா மற்றும் சுஜி ஹல்வா என்ற காரம் மற்றும் இனிப்பு பதார்த்தங்களை தயாரிக்கவுள்ளனர்.

இளம் சீக்கியர் கூட்டமைப்பின் சமையல் நிகழ்ச்சியைக் காண இங்கு கிளிக் செய்யுங்கள்.

சிங்கப்பூர் இயுரேசிய சங்கம்

சர் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் 1819ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வந்தடைந்ததும் பிரிட்டிஷ் நிர்வாகச் சேவையில் பணியாற்ற (மலாக்கா, பினாங்கு போன்ற வட்டாரங்களில் வாழ்ந்த) இயுரேசியர்களை இங்கு குடியேறுவதற்கு அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் இயுரேசியர்கள் ஆரம்பத்தில் இருந்தே இங்கு குடியேரிய சமூகங்களில் ஒன்றானார்கள். ஐரோப்பிய முன்னோர்கள் அன்று உணவும் மருந்தும் ஆக இருந்த மசாலை வணிகத்தை நாடி ஆசியாவிற்கு வந்ததனால் இன்று இயுரேசியர்கள் இப்பகுதிகளில் நிலைபெற்று இருக்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் உள்ளூர் பெண்களை மணந்துகொண்டனர். அவர்களில் போர்த்துகீசியர்கள் 1511ம் ஆண்டிலும், டச்சுக்காரர்கள் 1641ம் ஆண்டிலும் பிரிட்டிஷ்காரர்கள் 1795ஆம் ஆண்டிலும் இந்தப் பகுதிகளில் குடியேறினர்.

இயுரேசிய சங்கத்தின் இலக்கு

பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல சமூகங்கள் ஒருங்கிணைந்து வாழும் சிங்கப்பூரின் பிணைப்பில் அங்கமாகி, அதன் வளர்ச்சிக்கு பங்களித்து ஒற்றுமையான துடிதுடிப்பான இயுரேசிய சமூகத்தின் மரபை மேலும் வளப்படுத்துதல்.

கல்வியில் மேம்பாடு, குடும்பங்களுக்கு துணையாக இயங்கும் சேவைகள், சமூக மேம்பாடு ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களின் செயல்பாடுகளின் வழி சமூகத்துக்கு உதவுவது.

ஒரு சமூக நடவடிக்கை மன்றமாக 1919ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இயுரேசிய சங்கம், 1994ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் செயலாற்றும் சுய உதவிக் குழுக்களில் ஒன்றாக இயங்குகின்றது. சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், யாயசான் மென்டாக்கி எனப்படும் மலாய் சமூதாய மேம்பாட்டு மன்றம் ஆகிய அமைப்புகளுடன் மிகவும் அணுக்கமாக இயுரேசிய சங்கம் பணியாற்றுகின்றது.

நடவடிக்கைகள்

இயுரேசிய சங்கத்தின் இலக்குகளாகக் கல்வி, குடும்பங்களுக்கு உதவும் சேவைகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய மூன்றையும் குறிப்பிட வேண்டும். அதன்படி பொருளாதாரம் குன்றிய மாணவர்களின் கல்விப் பயணத்துக்குத் துணையாக உபகாரச் சம்பளங்கள், மேற்கல்விக்கான உதவித் தொகைகள் சங்கத்தால் வழங்கப்படுகின்றது. துணைப்பாட வகுப்புகள், மேம்பாட்டுத் திட்டங்களும் அவற்றுள் அடங்கும். இக்கட்டான நிலைமையைக் கடந்துசெல்ல, குடும்பங்களுக்கான உதவிச் சேவைகளின் வழி உணவுப் பொருட்கள், பற்றுச் சீட்டுகள், நிதி உதவி போன்றவற்றை குடும்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். இவை இரண்டுடன் சமூகத்துக்கு நற்சேவையாற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட தொண்டூழியர்களை ஒன்றிணைக்கும் சமூதாய நிகழ்ச்சிகளை இயுரேசிய சங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

சமய வழிபாடு

பொதுவாக பல இயுரேசியர்கள் போர்த்துகீசிய வம்சாவளியினராதலால் கிருஸ்துவ சமயத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக ரோமன் கத்தொலிக்கர்களே அதிகமானோர் உள்ளனர். அவர்கள் வாராந்தர அடிப்படையில் சமய நம்பிக்கையின் அடையாளமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்துக்குச் செல்கின்றனர். சமயம் அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாதது. ஆகவே இயுரேசியர்கள் தேவாலயங்கள், பள்ளிகள் அருகில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். மேலும் 1904ம் ஆண்டில் போர்த்துகீசிய சமய போதக மிஷனரிகள் எழுப்பிய செயின்ட் ஜோசப் தேவாலயம் அருகில் சிங்கப்பூரின் முதல் இயுரேசிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாக வாட்டர்லூ ஸ்திரீட் மற்றும் குவின் ஸ்திரீட் வட்டாரம் அமைந்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு முன், யார்ன் எட் இஎ (Yarn@EA) என்ற மூத்தோர் குழு வாராவாரம் ஒன்றிணைந்து, கைத் தையல் வடிவமைப்பு, நூல் நெய்தல் அலங்காரங்கள் போன்ற பல கலை, கைவினைப் பொருட்களைத் தயாரித்தனர். அவர்கள் அவ்வாறு பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்களை துடிப்பாக வைத்துக்கொண்டனர். அவர்களது தயாரிப்புகள் இயுரேசிய சங்கத்தின் முகப்பில் உள்ள கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இளையர் செயல்குழு அரசாங்க அமைச்சர்களுடன் பல பயன்தரக்கூடிய தலைப்புகளில் கலந்துரையாடல்களை நடத்தினர்.

இயுரேசிய பாரம்பரிய காட்சியகம் பல சுற்றுலாக்களை அடிக்கடி நடத்திவருகின்றது.

பண்டிகைகள்

இயுரேசியர்களுக்கு கிறுஸ்துமஸ் விழாவும் ஈஸ்டர் பண்டிகையும் இருபெரும் விழாக்களாகும். தேவாலயங்களில் உணவு விருந்துகள் பரிமாறப்படுவதில்லை. சமய நம்பிக்கை இயுரேசிய சமையலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக கொண்டாட்டங்களின் பொழுதும் விழாக்காலங்களிலும் இயுரேசியர்களின் பிரபலமான உணவான கறி டெபால் (Curry Debal/Devil Curry) என்ற வகையைச் சொல்லலாம். டெபால் என்றால் மிச்சமீதி என கிரிஸ்தாங் மொழியில் அழைப்பர். அந்த மொழி, பல தலைமுறைகளுக்கு முன் இயுரேசியர்களால் பேசப்பட்டது. அந்த வகை உணவு 1500ம் நூற்றாண்டுகளில் உருவானது. கிறுஸ்துமஸ் விழா முடிந்து சமைத்து மீதம் இருந்த இறைச்சி போன்ற உணவுகள் அனைத்தும் ஒரு காரம் நிறைந்த கலவையில் நிறைய மிளகாய் மற்றும் சுக்கா எனப்படும் சுவையோடு சமைக்கப்பட்டது.

மரபுடைமை விழாவில் இயுரேசிய சங்கத்தின் காட்சியகம் , உணவு

இந்த ஆண்டின் மரபுடைமை விழாவை முன்னிட்டு, இயுரேசிய சங்கம் இயுரேசிய பாரம்பரிய காட்சியகத்துக்கு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சிகளின் அங்கமாக இயுரேசிய சமையல் நிபுணர் குயென்டின் பெரேராவின் நேரடி சமையல் திறன் செயல் விளக்கங்களும் வழிகாட்டியுடன் சுற்றுலாவும் அடங்கும். உணவுக்கு தனி ருசி சேர்ப்பதோடு இல்லங்களில் மருத்துவத்துக்கும் பயன்படும் மசாலா பொருட்களைப் பற்றிய விவரங்களை சுற்றுலாக்கள் எடுத்துக்காட்டும். பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் சுஜீ என்ற (பாரம்பரிய இயுரேசிய இனிப்புப்) பதார்த்ததை சுவைத்து தேநீர் அருந்தி மகிழலாம்.

யுரேசிய சங்கத்தின் சமையல் நிகழ்ச்சிகயைக் காண இங்கு கிளிக் செய்யலாம்.



 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!