‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுதல் சீனப் புத்தாண்டுவாக்கில் தொடங்கலாம்

கொவிட்-19 கொள்ளைநோய் எதிர்ப்புசக்தியை மேலும் அதிகரிப்பதற்கான 'பூஸ்டர்' தடுப்பூசி போடும் இயக்கம் வரும் சீனப் புத்தாண்டு வாக்கில் தொடங்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டகிராம் சமூக ஊடகத் தளத்தில் நேரலையில் பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசியின் வீரியம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரைஇருக்கும். எனவே, எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மேற்கொண்டு கூடுதல் தடுப்பூசி போட வேண்டி இருக்கும்.

சிங்கப்பூரில் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு, அடுத்த பிப்ரவரியில் அதாவது வரும் சீனப் புத்தாண்டு சமயத்தில் ஓராண்டு நிறைவு பெறுவதால், கூடுதல் தடுப்பூசி போடுவதற்கு அது சரியான காலமாக இருக்கும் என்றார் அவர்.

தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசி மருந்துகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் போதுமானது. ஆனால், கூடுதல் பூஸ்டர் ஊசி போடுவதற்கு மருந்துகளைக் கொள்முதல் செய்ய வேண்டி வரும் என்றார் அமைச்சர் ஓங்.

சிங்கப்பூரின் தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு டிசம்பரில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டதிலிருந்து தொடங்கியது. ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி, மொடர்னா எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் 15 முதல் 18 மாதங்கள் வரை பாதுகாப்பைப் பெறுவர் என்று சிங்கப்பூரின் மருத்துவ சேவை இயக்குநர், இணைப் பேராசிரியர் கென்னத் மாக் ஏப்ரல் மாதத்தில் கூறியிருந்தார்.

கொவிட்-19 கொள்ளை நோய் உலகெங்கும் பரவி வரும் நிலையில், சிங்கப்பூர் அதை எதிர்கொள்ள பல அடுக்கு கொண்ட தடுப்பூசி இயக்கத்தைத் தொடர வேண்டி இருக்கும் என்று அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர்கள் கடந்த மாதம் புதிய இயல்புநிலைக்கான தங்களது திட்டங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

உயர்மட்ட பாதுகாப்பைத் தக்கவைக்க எதிர்காலத்தில் 'பூஸ்டர்' தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்று அவர்கள் மேலும் கூறினர்.

திரு ஓங், வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகியோர் அமைச்சுநிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களாக உள்ளனர்.

இன்ஸ்டகிராம் நேரலை உரையாடலில், 'பூஸ்டர்' தடுப்பூசிக்கு மற்றொரு வகை தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை என்றும் திரு ஓங் கூறினார்.

இதன்பொருள், ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் 'பூஸ்டர்' ஊசிக்கு அதே தடுப்பூசியைப் போடவேண்டும் என்பதில்லை.

தடுப்பூசிகளைக் கலப்பது சாத்தியமானது என்று நம்பப்படுவதாகவும், இங்கும் வெளிநாட்டிலும் உள்ள அதிகாரிகள் இதன் செயல்திறன் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் திரு ஓங் கூறினார்.

பயணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திரு ஓங், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஓய்வுக்காக வெளிநாடு செல்ல முதல் வரிசையில் இருப்பார்கள் என்று கூறினார்.

"நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால், நீங்கள் தனிமைப்படுத்தப்படாமல் காற்பந்தாட்டம் பார்க்க ஜெர்மனிக்குச் செல்லக் கூடும். மேலும் சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு தனிமைப்படுத்தல் அவசியமிருக்காது போகலாம். கிருமிப் பரி சோதனை மட்டுமே செய்துகொள்ள வேண்டியிருக்கும்," என்றார் அவர்.

பயணம் செய்ய விரும்பினால் நீங்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பயணங்கள் மீண்டும் தொடங்கும்போது, ​​தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும்.

அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விகிதங்களைக் கொண்ட, தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் பயணத்துக்கு சாத்தியமான இடங்களாக இருக்கும்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, தனிமைப் படுத்தலுக்குப் பதிலாக கொவிட்-19 பரிசோதனைகள் இடம்பெறலாம்.

ஹாங்காங்கும் சிங்கப்பூரும் அவற்றுக்கு இடையிலான பயண ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்ய நல்ல நிலையில் உள்ளன. இது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது என்பதையும் திரு ஓங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!