கழக வீடுகளுக்கு ரொக்கம் கொடுத்தோர் அதிகரிப்பு

2 mins read
9f25b9ef-e0c8-4a19-ac53-aca762c905ba
மணமுறிவு, பிரிவு காரணமாக ஏறத்தாழ 700 வீடுகள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளை இந்த ஆண்டு வாங்கியவர்களில் ஏறத்தாழ மூன்று பேரில் ஒருவர், மதிப்புக்கு மேலே ரொக்கம் கொடுத்து அவற்றை வாங்கினர்.

கடந்த ஆண்டு, மறுவிற்பனை வீடுகளை ஐந்து பேர் வாங்கினால் அவர்களில் ஒருவர் மட்டுமே ரொக்கம் கொடுத்தார். மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து அதிகமாகி வரும் நிலையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனியார், அரசாங்க வீடுகளுக்கான தேவை உயர்ந்திருப்பதை அது காட்டுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்த எழுத்துபூர்வ பதில் ஒன்றில் அத்தகவலை வெளியிட்டது.

வீவகவின் மதிப்பீட்டுக்கு அதிகமான தொகைக்கு மறுவிற்பனை வீடு விற்கப்பட்டால் சிஒவி எனும் ரொக்கத் தொகை கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை மறுவிற்பனை வீட்டை வாங்கியவர்களில் சுமார் 25% பேர் ரொக்கம் கொடுத்த தாக அமைச்சு தெரிவித்திருந்தது.

அக்காலகட்டத்தில் சுமார் 34,600 மறுவிற்பனை வீடுகள் கைமாறின என்று ஆரஞ்சு அண்ட் தியே நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுத் துறைத் துணைத் தலைவர் திருவாட்டி கிறிஸ்டீனா சன் கூறினார். ஆக, இவர்களில் சுமார் 8,600 பேர் ரொக்கம் கொடுத்து வீடு வாங்கினர். அவர்களில் பாதி பேர், அதாவது 3,400 பேர், $20,000க்கு மேல் ரொக்கம் கொடுத்து மறுவிற்பனை வீடு வாங்கியதாக திருவாட்டி சன் குறிப்பிட்டார்.

வீவக மறுவிற்பனை வீட்டு விலை இப்படியே உயர்ந்துகொண்டிருந்தால், இவ்வாண்டு பிற்பாதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் முன்னுரைக்கின்றனர்.