மரினா பே மிதக்கும் மேடையில்
நாளை அவசரநிலைப் பயிற்சி
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி பின்னிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மரினா பே மிதக்கும் மேடையில் அவசரநிலைப் பயிற்சியை மேற்கொள்ளும்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நேற்று ெவளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது. பயிற்சியின்போது அவசரநிலை வாகனங்கள் மிதக்கும் மேடைக்கு அனுப்பப்படும். சுமார் 200 குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் பயிற்சியில் பங்குபெறுவார்கள். அத்துடன் 25 அவசர வாகனங்களும் துணை வாகனங்களும் பயிற்சியில் கலந்துகொள்ளும்.
இத்தகைய பயிற்சிகள் தனது செயல்பாட்டுத் திட்டங்களையும் வழிமுறைகளையும் சோதித்து புதுப்பிக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்று என்று கூறப்பட்டது.
அவசரநிலை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக மரினா பே மிதக்கும் மேடை அருகே உள்ள ராபிள்ஸ் அவென்யூ வில் உள்ள மூன்று வழித்தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்படும். அவசரநிலை நடவடிக்கை முடிவுற்ற பின்னர் வழித்தடங்கள் மீண்டும் திறந்துவிடப்படும்.
லோ தியா கியாங்: மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாக்க, முடிந்த வரை விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்று பாட்டாளி கட்சியின் முன்னைய தலைமைச் செயலாளர் திரு ேலா தியா கியாங் முதியவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாட்டாளி கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் திரு லோ அது குறித்து மாண்டரின், தியோச்சூ மொழிகளில் பேசிய காணொளி நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முத்தோர், தற்செயலாக தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு கிருமியைப் பரப்பலாம் என்று அவர் எச்சரித்தார். 64 வயது திரு லோ, கடந்த ஏப்ரலில் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவுடன் வாழ சிங்கப்பூர் தயாராகி வருகிறது என்றார் திரு லோ. ஆனால் தொற்று ஏற்பட்டால், அது நம் உடல்நிலையைப் பெரிதும் பாதிக்காமல் இருக்க ஆவன செய்யவேண்டும் என்றார் அவர்.
செலாராங் பார்க் வளாகத்தில் தொற்றில்லை
செலாராங் பார்க் வளாகத்தில் தங்கும் விடுவிக்கப்பட்ட கைதிகள், அங்குள்ள அதிகாரிகள் 350 பேருக்கு கிருமித் தொற்றில்லை என்று பரிசோதனை முடிவுகள் காட்டியுள்ளன.
அந்த வளாகத்தில் ஆறு பேருக்கு தொற்று உள்ளதாக சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை கூறியது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.
சிறைத் தண்டனையின் கடைசி கட்டத்தில் சமூகத்தில் பணியாற்றும் திட்டங்களின் கீழ் உள்ளவர்கள் தங்கும் இடம்தான் செலாராங் பார்க் வளாகம். மேற்பார்வைக்கு உட்பட்டோர் என்று அழைக்கப்படும் விடுவிக்கப்பட்ட அந்தக் கைதிகள், பகலில் சமூகத்தில் சென்று வேலை செய்துவிட்டு வளாகத்தில் தங்குவார்கள். தொற்றுள்ள ஆறு பேரும் மேற்பார்வைக்கு உட்பட்டோர் என்றும் அவர்களுக்கு ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது என்றும் சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறை நேற்று முன்தினம் கூறியது.
ஹோங் லிம், சொங் பூன் சந்தைகள்
இன்று மீண்டும் திறப்பு
கிருமித்தொற்று ஏற்பட்டதால் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த ஹோங் லிம் சந்தை, உணவங்காடி நிலையமும் சொங் பூன் சந்தை, உணவங்காடி நிலையமும் இன்று மீண்டும் திறக்கப்படும்.
தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்தது.
அச்சந்தைக் கடைகளில் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதால் அங்கு சென்று பொருட்களை வாங்கும்படி வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

