சிந்தனையும் சமூகமும் சார்ந்த மாறுபட்ட கல்வி

கி.ஜனார்த்தனன்

சிங்கப்பூரில் வழங்கப்படும் மேல்நிலைக் கல்வித் தகுதிகளில் ஒன்றான அனைத்துலக பக்கலோரெட் பட்டயம், தங்களுக்குக் கல்வியை மட்டுமல்லாது சமூக உணர்வு, தன்னிச்சையான சிந்தனையாற்றல் போன்ற பலன்களைத் தந்துள்ளதாகக் கூறினர் அதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள்.

சென்ற ஆண்டு அனைத்துலக பக்கலோரெட் பட்டயத் தேர்வில் 12,405 மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றனர். என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளியில் அப்பட்டயக் கல்வியைப் பயின்று இவ்வாண்டு மே மாதம் நிறைவுபெற்ற தேர்வில் முழுமை யான 45 புள்ளிகளையும் பெற்ற ஐந்து மாணவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

சமூக உணர்வை அதிகரிக்கும் கல்வி

வருங்காலத்தில் மருத்துவராக விரும்பும் டி. அமான், 19, சமூக உதவித் திட்டத்தை உருவாக்கிய அனுபவம் தம்மைக் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.

புத்தாக்கம், செயல், சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அப்பாடத்தின் ஒரு பகுதியாக சுமார் 18 மாதங்களாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் தனியே வசிக்கும் முதியவர்களிடம் அவர் உரையாடி நட்புடன் பழகி உதவவேண்டும். பட்டயத்தின் கட்டாய அங்கம் என்றாலும் இதை ஒப்புக்காகச் செய்துவிடலாம் என்ற எண்ணம் தமக்குச் சற்றும் இல்லை என்று அவர் கூறினார்.

"நான் பேசிப் பழகிய முதியோர் பலருக்கு நாட்பட்ட நோய்கள் இருந்தன. அவர்களைக் கவனித்து தேவைகளை அறிய வேண்டி இருந்தது. இந்த அனுபவம் என்னை மேலும் பண்படச் செய்தது," என்று ஓய்வு நேரங்களில் கூடைப்பந்து விளையாடும் அமான் கூறினார்.

தன்னிச்சையான சிந்தனையாற்றல்

அனைத்துலக பக்கலோரெட் கல்வியில் தம்மைக் கவர்ந்தது 'அறிவுத் திறன் கோட்பாடு' என்ற தத்துவம் சார்ந்த பாடம் என்று ரூபா திரிபதி, 18, தெரிவித்தார்.

சிந்தனைத் திறனை மேம்படுத்தும் இத்தகைய பாடங்கள், பக்கலோரெட் கல்வியின் நீக்குப்போக்கான தன்மை ஆகியவை பல்கலைக்கழகத்துக்கு நன்கு தயாராக உதவுவதாக இவர் நம்புகிறார்.

"என் பள்ளியில் இருந்த வாழ்க்கைத் தொழில் ஆலோசகர்களை அணுகி அறிவுரை பெற்றேன். பள்ளிகளில் உள்ள இத்தகைய ஏராளமான வளங்களை மாணவர்கள் ஆர்வத்துடனும் முனைப்புடனும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்," என்றார் ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் ரசாயனத் துறையில் பயிலவிருக்கும் ரூபா.

விலங்குநல அமைப்புகளில் சேவையாற்றும் ரூபா, அதன்வழி சந்தைப்படுத்துதல், நிர்வாகம் போன்ற திறன்களைப் பெற முடிந்ததாகக் கூறினார்.

நல்லோரின் ஆதரவு முக்கியம்

உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைத்த திருப்தியில் உள்ளார் பிரணவ் ஆனந்த், 18. ஏட்டுக்கல்வி மட்டும் ஒருவரின் தரத்தை முடிவுசெய்யாது என்றாலும் நல்ல மதிப்பெண்கள் மேன்மேலும் சாதிக்கும் உற்சாகத்தைத் தருவதாக அவர் சொன்னார்.

"என் மீது எனக்கே அடிக்கடி சந்தேகம்வரும்போது படிப்பில் காணும் சிறு வெற்றிகள் என்னை நிதானப்படுத்துகின்றன. எனது பள்ளி நண்பர்களும் படிப்பில் முனைப்பு காட்டுபவர்கள். அவர்களின் ஆதரவால் என் தன்னம்பிக்கையும் வளர்ந் தது," என்று மருத்துவத்துறையில் பயிலவிருக்கும் இந்த மாணவர் கூறினார்.

தமது படிப்புக்கு ஒத்துப்போகும் இணைப்பாட நடவடிக்கையைத் தேர்ந்தெடுத்த பிரணவ், பள்ளியின் மருத்துவ மன்றத்தில் சேர்ந்து அதன் மூலம் மருத்துவ மாநாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.

அதிகபட்ச பலனைப் பெறவேண்டும்

பிரணவ் போல மருத்துவத் துறையைத் தேர்வு செய்துள்ளபோதும் தமது மனதுக்கு நெருக்கமான பாடம் ஆங்கில இலக்கியம் என்று மாணவ், 19, கூறினார்.

ஐபி கல்வியின் மூலம் இலக்கியம் எனும் புதிய உலகத்தில் நுழைய முடிந்ததாக இவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் உயிரியலில் ஆர்வம் கொண்டுள்ள தமக்கு ஆய்வு நடத்துவதற்கான வசதியையும் வழிகாட்டுதலையும் பள்ளி வழங்கியதாக மாணவ் கூறினார்.

எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதிகபட்ச பலன்பெற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளதாகக் கூறும் இ்த்திடல்தட வீரர், சரியாகவும் கவனமாகவும் நேரத்தை ஒதுக்கவேண்டும் என்றார்.

எதற்கு முதலில் முக்கியத்துவம் தரவேண்டும் என்று முடிவு செய்யும் திறன் மாணவப் பருவத்திலேயே தொடங்கவேண்டும் என்றும் மாணவ் சொன்னார்.

மனதைத் திசைதிருப்பும் திறன்

திறன் என்பது திடீரென வந்துவிடாது. தாமே தமது வாழ்க்கைக்கு பொறுப்பு வகித்து பல திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றார் அபிஷேக் பாலாஜி, 18. கவனத்தைக் குவிப்பது ஒரு திறன் என்றால் மனதைத் திசைதிருப்பக் கற்றுக்கொள்வதும் ஒரு திறன் என்று இவர் முன்வைத்தார். ஓய்வு நேரங்களில் தபலா வாசிக்கும் இவர், இதனைத் தாம் ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாகவே கருதுவதாகத் தெரிவித்தார்.

"கடுமையாக உழைக்கும் மாணவர்கள் களைப்பால் சோர்ந்துவிடாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது," என்று அபிஷேக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!