செய்திக்கொத்து

வர்த்தக, தொழில் அமைச்சர் கானின் நான்கு நாள் அமெரிக்கப் பயணம்

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று தொடங்கிய பயணத்தில் அவர் வாஷிங்டனுக்கும் நியூயார்க் நகருக்கும் செல்கிறார். அவரது பயணம் சிங்கப்பூர் அமெரிக்காவுடன் கொண்டிருக்கும் நீண்ட, வலுவான பொருளியல் உறவை வலுப்படுத்துவதாக இருக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சு கூறியது.

திரு கான் வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜீனா ராய்மொண்டோ, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாய் இருவரையும் சந்திப்பார்.

இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் வாய்ப்புகளையும் புதிய, தற்போதைய பங்காளித்துவங்களின் மூலம் கூடுதல் வர்த்தகத்தையும் முதலீட்டையும் ஊக்குவிப்பதையும் பற்றி இவர்கள் பேசுவார்கள் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் திரு கான் அமெரிக்க, சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பார்.

நவ. 1லிருந்து அதிகமான இல்லப் பணிப்பெண்களுக்கு அனுமதி

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இன்னும் அதிகமான இல்லப் பணிப்பெண்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே இங்கு அனுமதிபெற பரிசீலிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட இல்லப் பணிப்பெண்களுக் கான விண்ணப்பங்களை அரசாங்கம் வரும் 15ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளும் என்று அவர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார்.

உடல்நலமில்லாதவர், முதியவர்கள், சிறப்புத் தேவை உள்ளவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார். ஆனால் பொதுச் சுகாதாரக் காணரங்களுக்காக இல்லப் பணிப்பெண்கள் இங்கு வர மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை எடுக்கலாம் என்றும் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள பெருந்தொற்றுச் சூழலை அது பொறுத்திருக்கும் என்றும் அவர் கூறினார். பாட்டாளிக் கட்சி உறுப்பினர் டென்னிஸ் டானின் கேள்விக்கு அமைச்சர் பதில் கூறினார்.

கொரோனா வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவலாம்

எதிர்காலத்தில் மனிதர்களிடமிருந்து கொரோனா கிருமி மீண்டும் வௌவால்களுக்குப் பரவினால் சார்ஸ்-சிஓவி-3 எனும் புதிய கொரோனா வகைக் கிருமி உருவாகி நாடுகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. டியூக்-என்யுஎஸ் புதிய தொற்றுநோய் தடுப்புத் திட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாங் லின்ஃபா அவ்வாறு கூறியுள்ளார். நேற்று நடந்த ஆசியான் மின்னியல் பொதுச் சுகாதாரத்துக்கான சிறப்பு அமைச்சர்நிலை மாநாட்டில் பேராசிரியர் வாங் உரையாற்றினார். பெருந்தொற்றுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் பற்றியும் அவர் அதில் பேசினார்.

தற்போதைய சார்ஸ்-சிஓவி-2 கொரோனா வகைக் கிருமி, முதலில் வௌவால்களிடமிருந்து எறும்புண்ணிகள், புனுகுப் பூனைகள் போன்ற விலங்குகளுக்குப் பரவி அவை மூலம் சீனாவின் வூஹான் மாநிலத்தில் உள்ள மீன்சந்தையில் மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது.

ஆனால் அதே கிருமி மிக எளிதில் மனிதர்களிடமிருந்து பரவக் கூடியது என்றார் பேராசிரியர். வௌவால்களின் எதிர்ப்பாற்றல் மிகத் தனித்துவம் வாய்ந்தது. நோய் உருவாகாமலே அவற்றின் உடலுக்குள் கிருமி வெவ்வேறு வகைகளாக உருமாறி பின்னர் வேறு யாருக்கோ தொற்றலாம் என்று பேராசிரியர் வாங் விளக்கினார்.

புகை பிடிப்பவர்களுக்கு உதவும் மாத்திரைகள் இங்கு நிறுத்தப்பட்டன

புகை பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட உதவியாக அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து ஒன்றின் விநியோகம் சிங்கப்பூரில் நிறுத்தப்பட்டிருக்கிகறது.

சேம்பிக்ஸ் (Champix) எனப்படும் அந்த மாத்திரைகளில் நைட்ரோசமின் எனும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கூறுகள் உள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. அந்த மாத்திரைகளை ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

சேம்பிக்ஸ் மாத்திரைகளில் அந்த ரசாயன மாசுக்கூறுகள் இருப்பது பற்றி ஃபைசர் கடந்த மே மாதம் தன்னிடம் தகவல் அளித்ததாக ஆணையம் கூறியது.

முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மாத்திரைகளின் விநியோகம் ஜூன் மாதம் நிறுத்தப்பட்டன.

சேம்பிக்ஸ் மாத்திரைகள் குறுகிய காலத்துக்கு மட்டும் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதால் இதை உட்கொண்டவர்களை சாப்பிட்டவர்களை நைட்ரோசமின் பாதிக்க அதிக வாய்ப்பில்லை என்று ஆணையம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!