கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் பெண் தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலிஸ் அதிகாரிக்குக் கையூட்டு கொடுக்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. 28 வயதான சென் யுவென்யுவென் என்ற அப்பெண், பொது இடத்தில் மது போதையில் இருந்ததாகவும் இரண்டு அதிகாரிகளின் கால்களை உதைத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த அவர் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அரசாங்க ஊழியரை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள், ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு, கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
மது போதையில் போலிஸ் அதிகாரிகளை உதைத்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதியன்று நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று சென், அப்போதிருந்த கொவிட்-19 விதிமுறைகளை மீறி ஓர் அடுக்குமாடி வீட்டில் 14 பேருடன் ஒன்றுகூடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதைக் கண்டுபிடித்த போலிஸ் அதிகாரிக்கு அவர் 100 வெள்ளி கையூட்டு கொடுக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது

