கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் ஆகச் சிரமமான காலகட்டத்தைச் சிங்கப்பூர் சந்தித்துவரும் நிலையில், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதைப் பிரதமர் லீ சியன் லூங் ஒத்துக்கொண்டார்.
நாட்டு மக்களிடம் நேற்று நேரடியாக உரையாற்றியபோது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
"உங்களையும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பையும் பாதுகாக்க எங்களால் ஆன எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எங்களால் உங்களைப் பாதுகாக்க முடியாவிடில், உங்களாலும் எங்களைப் பாதுகாக்க இயலாது. சிங்கப்பூரர்கள் அனைவரின் சார்பாக, உங்கள் எல்லார்க்கும் நன்றிகூறிக் கொள்கிறேன். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்களது முழு ஆதரவையும் உங்களுக்கு வழங்குவோம்," என்றார் பிரதமர்.
கொரோனா பெருந்தொற்றைப் பாதுகாப்பாகக் கடந்துவர என்ன விலை கொடுத்தேனும் நம் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பையும் அதன் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அவர் சொன்னார்.
கிருமிப் பரவலின் முழுப் பளுவையும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தாங்கி வருவதாக நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர்களும் புகழாரம் சூட்டினர்.