வெளிநாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசிச் சான்றிதழ் வழங்குநர்களிடையே தரப்படுத்துதல் முறை இல்லாததால், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டம் (விடிஎல்) மூலம் சிங்கப்பூருக்கு வர விண்ணப்பிக்கும் பயணிகள் சிலர் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, பயணி ஒருவர் விடிஎல் இணையத் தளம் ஏற்றுக்கொள்ளும் தடுப்பூசிச் சான்றிதழ் பெற கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளார்.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த 'விடிஎல்' திட்டத்தைக் கையாளும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், "சில பயணிகள் வைத்திருக்கும் தடுப்பூசி சான்றிதழ் சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்திருக்கலாம்.
"சம்பந்தப்பட்ட அமைப்பும் பாதுகாப்பான பயண அலுவலகமும் ஒவ்வொரு பயணியும் எதிர்நோக்கும் பிரச்சினையையும் தனித்தனியாக ஆராய்ந்து உதவி செய்யும்," என்று விவரித்தது.
உதாரணத்துக்கு, அமெரிக்கா வின் 'காமன்டிரஸ்ட் நெட்வொர்க்' மற்றும் 'வெக்சிநேஷன் கிரிடேன்ஷல் இனிசியேட்டிவ்' எனும் கட்டமைப்பின் பட்டியலில் அறிவார்ந்த சுகாதார அட்டைகள் வழங்கும் அமெரிக்கச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பும் அடங்கியுள்ளது.
இந்தக் கட்டமைப்புகள் வழங்கும் அறிவார்ந்த சுகாதார அட்டைகள், விடிஎல் விண்ணப்பத்தின்போது தடுப்பூசி போட்டதற்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சிங்கப்பூரின் பாதுகாப்பான பயண இணையத்தளம் கூறுகிறது.
தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யும்போது சில பயணிகள் சிரமத்தை எதிர்நோக்க நேரிடும் என்று குறிப்பிட்ட ஆணையம், அவர்களின் நாட்டில் வழங்கப்பட்ட தடுப்பூசிச் சான்றிதழ் இங்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைப்பு முறையில் இருக்காது என்று கூறியது.
"எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் சில தடுப்பூசி சான்றிதழ் வழங்குநர்கள் வெளிநாடுகளில் அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான வடிவில் அமைத்திருக்க மாட்டார்கள்," என்றார் ஆணையத்தின் விமான நிலைய செயல்பாட்டு ஒழுங்குமுறை மற்றும் விமானத்துறை பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் மார்கரெட் டான்.
விடிஎல் திட்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் அனைத்து நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசி சான்றிதழைக் கொண்டிருந்தாலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அவ்வாறு இல்லை.
அனைத்து நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசிச் சான்றிதழ் முறைக்கு மாற கனடா தற்போது முயன்று வருகிறது.
ஆனால், அமெரிக்கா இன்னும் அந்தந்த மாநில சுகாதார அமைப்புகள், மருந்தகங்கள், வால்மார்ட் போன்ற பேரங்காடிகள், இதர சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் போன்றவற்றைச் சார்ந்துள்ளது.
தடுப்பூசிச் சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சிங்கப்பூருக்கு அறிவார்ந்த சுகாதார அட்டை வழங்குநர்களிடமிருந்து அனைத்து நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் சில வழங்குநர்கள் அறிவார்ந்த சுகாதார அட்டையை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"மற்ற நாடுகளின் வழங்குநர்களின் சான்றிதழ்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவோம்," என்றும் திருவாட்டி டான் கூறினார்.
இந்த விடிஎல் பயணமுறை இம்மாதம் 12ஆம் தேதி அறிமுகம் கண்டதிலிருந்து இதுவரை 5,000 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் ஒரே சமயத்தில் பல ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைக் கையாளும் ஆற்றலையும் தான் கொண்டிருப்பதாக சிவில் விமானப் போக்கு
வரத்து ஆணையம் தெரிவித்தது.