இயல்புநிலையில் இருப்பதைக் காட்டிலும் சிங்கப்பூரின் பொருளியல் வேகமாக வளர்ச்சியடைய உள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் முன்னுரைத்துள்ளது. இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் பொருளியல் செயல்பாடு கொள்ளைநோய்க்கு முந்தைய காலத்தில் இருந்த அளவை எட்டியதாக ஆணையம் குறிப்பிட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவல் மறுபடியும் மோசமடையக்கூடும் என்ற கவலை தொடர்ந்து இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உலகளவிலும் சிங்கப்பூரிலும் பணவீக்கம் அதிகரிக்கும் என்று நாணய ஆணையம் எதிர்பார்க்கிறது. இது, சிங்கப்பூரின் பொருளியல் முன்னுரைப்புக்கு சவாலாக அமையலாம் என்றும் அது கூறியது. சிங்கப்பூர் வர்த்தகத்தை அதிகம் சார்ந்திருப்பது இதற்குக் காரணம்.
எனினும், சிக்கல்கள் வராதிருந்தால் குறைந்துவரும் கிருமிப் பரவல் அலைகள், உலகளவில் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவது ஆகிய அம்சங்கள் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடப்பில் இருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்ற வகைசெய்யும் என்று ஆணையம் சொன்னது. இது, இவ்வாண்டின் கடைசி காலண்டிலிருந்து அடுத்த ஆண்டு வரை சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியடைய உதவும் என்று அது குறிப்பிட்டது.
இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் ஆறிலிருந்து ஏழு விழுக்காடு வரை வளர்ச்சியடையும் என்று நாணய ஆணையம் முன்னுரைத்துள்ளது. இவ்விகிதம், கொள்ளைநோய் சூழலுக்கு முந்தைய காலத்தில் சராசரியாக இரண்டிலிருந்து மூன்று விழுக்காடாகப் பதிவானதாகப் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கிலிருந்து ஐந்து விழுக்காடு வளர்ச்சியடையும் என்று அவர்களில் பெரும்பாலோர் கணித்துள்ளனர்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இவ்வாண்டு கட்டுப்பாடுகளை அடிக்கடி முடுக்கிவிடவும் கட்டுப்படுத்தவும் நேரிட்டது. இதன் காரணமாக பொருளியல் சீரான முறையில் மீண்டெழ முடியாமல் போனதாக ஆணையம் கூறியது. கொவிட்-19 சூழலால் இவ்வாண்டு ஏற்பட்ட குழப்பம் எதிர்பாராத ஒன்று என்றும் அது சுட்டியது.
இரண்டாம் காலாண்டில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.2 விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இவ்விகிதம் 6.5 விழுக்காட்டுக்குக் குறைந்தது.