பருவநிலை மாற்றத்தை நன்கு கையாண்டு அதற்கு உகந்த வர்த்தகக் கட்டமைப்பிற்கு மாறிக்கொள்ள நிறுவனங்களுக்கு உதவும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 'சிங்கப்பூர் சாப்டர் ஆஃப் தி கிளைமேட் கவர்னன்ஸ் இனிஷேட்டிவ்' எனும் இத்திட்டம், பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க நிறுவனங்களின் நிர்வாகக் குழு இயக்குநர்களுக்குக் கைகொடுக்கும்.
திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் குறைவான அளவில் கரிமத்தை வெளியிடும் பயன்படுத்தும் பொருளியலாக சிங்கப்பூர் மாறவேண்டும். அதற்கு நிறுவனங்கள் மிகப் பெரிய பங்கை ஆற்றவேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார். நீண்டகாலத்தில் தங்களின் நிறுவனங்களை வழிநடத்துவதிலும் அவை மீள்திறனுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துவதிலும் நிர்வாகக் குழு இயக்குநர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.