குடும்பத்தினர், நண்பர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூரர்களை ஆயத்தமாக்கும்
சிங்கப்பூரில் மனநலப் பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக பேசுவதை வழக்கமான ஒன்றாக ஆக்கும் நோக்கத்துடன் தேசிய மனநல இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆதரவு அளிக்க தேவைப்படும் தேர்ச்சிகளை எல்லா சிங்கப்பூரர்களுக்கும் இயக்கம் போதிக்கும்.
'மக்களை எட்டுவது சரியானதே' என்று குறிப்பிடப்படுகின்ற அந்த இயக்கத்தை சுகாதார மேம்பாட்டு வாரியம் நேற்றுத் தொடங்கியது.
தேசிய மனநல இயக்கத்தில் தொடக்கமான 130 செயல்திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. அடுத்த மாதத்திற்கும் வரும் மார்ச் மாதத்திற்கும் இடையில் நடக்கும் பயிலரங்குகளும் கலந்துரையாடல்களும் அவற்றில் அடங்கும்.
புதிதாகத் தொடங்கி இருக்கும் இயக்கத்திற்கு உறுதுணையாக நவம்பரில் MindSG என்ற இணையவாசல் ஒன்று தொடங்கப்படும்.
மருத்துவர்கள், உளவியல் வல்லுநர்களின் ஆலோசனைகள், கருத்துகள், பரிந்துரைகளுடன் அந்த இணையவாசல் தேசிய மனநல வளமாகத் திகழும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்தகைய இணையவாசல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கொவிட்-19 மனநலச் சிறப்புப் பணிக்குழு கடந்த ஆகஸ்ட்டில் பரிந்துரைத்து இருந்தது. அதையடுத்து சுகாதார மேம்பாட்டு வாரியமும் அரசாங்கமும் மனநல வல்லுநர்களுடன் சேர்ந்து அந்த இணையவாசலை உருவாக்கி உள்ளன.
இதனிடையே, புதிய இயக்கம் பற்றிக் கருத்துத் தெரிவித்த அந்தச் சிறப்புப் பணிக்குழுவின் தலை வரும் சுகாதார, தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி, உதவி தேவைப்படுவோர், உதவி செய்வோர் ஆகிய இரு தரப்பினரையும் உள்ளடக்கி, ஒரு தேசிய விவரத் தொகுப்பாக புதிய இயக்கம் இருக்கும் என்று கூறினார்.
பெரும்பாலான சிங்கப்பூரர்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சகாக்கள், நம்பிக்கைக்கு உரியவர்களிடம் இருந்து உதவி நாடவே விரும்பு கிறார்கள். ஆகையால் அத்தகையோர்க்கு உரிய தேர்ச்சிகளைப் போதிக்க விரும்புவதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்களில் பாதிப்பேர் மட்டுமே நிபுணர்களிடம் இருந்து உதவிபெற விரும்புகிறார்கள் என்பது 2019ல் நடத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்தது.
அதேவேளையில், நான்கு பேரில் மூவர், நண்பர்கள் உறவினர்கள், சகாக்கள், சமயத் தலைவர் அல்லது ஆசிரியரிடம் இருந்து உதவி பெற விரும்புகிறார்கள் என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டியது.
கொவிட்-19க்கு முன்பே, 18 முதல் 74 வரை வயதுள்ள சிங்கப்பூரர்களிடையே மனநலம் குறைந்து விட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவித்தது.
மனநலம் என்பது தங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது என்று சென்ற ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய இளையர் மன்ற ஆய்வில் கலந்துகொண்ட இளையர்களில் பாதிப்பேருக்கும் மேற்பட்டவர்கள் கூறினர். மனநலப் பிரச்சினை காரணமாக உயிர்மாய்ப்பு சம்பவங்களும் கூடிவிட்டதாகத் தெரிகிறது.