தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான சிறப்புப் பயணத் தடத் திட்டத்தை (விடிஎல்) சிங்கப்பூர் 13 நாடுகளுடன் துவங்கியுள்ளது. இது, கொவிட்-19க்கு முந்திய நிலையில் சாங்கி விமான நிலையத்தின் வருடாந்திர பயணிகள் வருகையில் 15 விழுக்காடாக இருந்திருக்கும். ஆனால் 'விடிஎல்' திட்டத்தின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவதால், வருடாந்திர பயணிகள் வருகை ஏறத்தாழ 5 விழுக்காடாக அமைந்திடும்.
ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுடன் செய்துகொண்ட ஏற்பாடு இம்மாத பிற்பாதியில் நடைமுறைப்படுத்தப்படும்போது தினமும் சாங்கி விமான நிலையத்திலிருந்து சுமார் 19 'விடிஎல்' விமானப் பயணங்கள் இயங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, 'விடிஎல்' திட்டத்திற்கான அன்றாட பயணிகள் எண்ணிக்கை, 2500லிருந்து 4,000க்கு அதிகரிக்கப்படும். இருப்பினும், ஒவ்வொரு 'விடிஎல்' விமானப் பயணத்திலும் கிட்டத்தட்ட 200 பயணிகள் மட்டுமே இடம்பெறுவதால், சிங்கப்பூருக்கும் குறிப்பிட்ட அந்த 13 நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் வருகை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை.
கிருமித்தொற்று நிலவரம், வெளிநாட்டிலிருந்து வருவோரிடையே கிருமித்தொற்று, விமானப் பயணங்களுக்கான தேவை ஆகிய அம்சங்களைப் பொறுத்து 'விடிஎல்' விமானப் பயணங்கள் அதிகரிக்கப்படும் என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார அபாயத்தை நிர்வகிக்கும் காப்பாக இந்த விடிஎல் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பயணிகள் வரம்பு ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் தனிமை உத்தரவு ஏதுமில்லாத விமானப் பயணங்களை சிங்கப்பூர் 13 நாடுகளுடன் தொடங்கியது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புரூணை, ஜெர்மனியுடன் தொடங்கி கனடா, டென்மார்க், ஃபிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான 'விடிஎல்' திட்டம் அடுத்த திங்கட்கிழமை முதல் தொடங்கும். 15ஆம் தேதி முதல் தென்கொரியாவுடனான 'விடிஎல்' திட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டது.