வேலையை விட்டு விலகும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
ஆண்டின் முதல் பாதியில் மட்டும் கிட்டத்தட்ட 1,500 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், வேலையை விட்டுச் சென்றதாக அவர் குறிப்பிட்டார். கொள்ளைநோய்க்கு முந்திய காலகட்டத்தில் சுகாதாரப் பராமரிப்பு வேலையிலிருந்து விலகியோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2,000 என இருந்ததையும் அவர் சுட்டினார்.
"சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையில் வேலையை விட்டுச் சென்றவர்கள் வெளிநாட்டவரே. வெளிநாட்டுப் பயணம் செல்ல முடியாத நிலையில் சொந்த நாட்டில் இருக்கும் தங்கள் குடும்பங்களை இவர்கள் பார்க்க முடியாமல் போகிறது," என்று அவர் விவரித்தார்.
இதுவரை, வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 500 மருத்துவர்கள், தாதியர் ஆகியோர் ஆண்டின் முதல் பாதியில் வேலையை விட்டு சென்றுள்ளனர். 2020ஆம் ஆண்டு முழுவதிலும் 500 பேரும் 2019ல் 600 பேரும் இவ்வாறு வேலையிலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது.
"குடியுரிமையில் மாற்றம் அல்லது தங்களின் சொந்த நாட்டிற்கே திரும்புவதைப் பெரும்பாலானோர் காரணமாகக் குறிப்பிட்டிருந்தனர்," என்று தமது அமைச்சர்நிலை அறிக்கையில் டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு முதல் விடுப்பில் செல்ல முடியாத சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களில் 90 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோரால் தங்களின் ஒட்டுமொத்த விடுப்பு நாட்களை 2021ல் எடுத்து முடிக்க முடியாமல் போகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். செப்டம்பரில் மட்டும் சராசரியாக 160 முதல் 175 மணி நேரத்திற்குத் தாதியர் வேலை பார்த்திருப்பதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, தேவையான இடங்களில் சுகாதார அமைச்சு அதன் ஊழியர்களைப் பொறுப்பேற்கச் செய்வதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்