சட்ட அமைச்சு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாவின்படி, வழக்கறிஞர்களுக்கும் அவர்களின் கட்சிக்காரர்களுக்கும் இடையே நிபந்தனையுடன் கூடிய கட்டண ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படுவது முதன்முறையாக சிங்கப்பூரில் சாத்தியமாகலாம்.
சட்டத் தொழில் சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் மாற்றங்களால் குறிப்பிட்ட ஒருசில வழக்கு நடைமுறைகள் தொடர்பில் தங்களின் கட்சிக்காரர்களுடன் வழக்கறிஞர்கள் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டண ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
நிபந்தனை அடிப்படையிலான கட்டண ஒப்பந்தம் அதாவது 'சிஎஃப்ஏ', செய்துகொள்ளப்படும்போது குறிப்பிட்ட சில சூழல்களில் மட்டுமே வழக்கறிஞருக்கு அவரது கட்டணம் முழுமையாக அல்லது ஒரு பகுதி கிடைக்கும்.
தற்போது இதுபோன்ற நிபந்தனை அடிப்படையான கட்டண ஒப்பந்தத்திற்கு சிங்கப்பூர் சட்டத்தில் இடமில்லை.
இது இங்கிலாந்து பொதுச் சட்டத்திலிருந்து உருவான ஒன்று. இருப்பினும் இத்தடையை இங்கிலாந்து 1990ஆம் ஆண்டில் அகற்றிவிட்டது.
இத்தகைய நிபந்தனையுடன் கூடிய கட்டண ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டால் அனைத்துலக சட்ட, சர்ச்சைத் தீர்வு மையமான சிங்கப்பூரின் நிலை வலுப்பெறும் என்று சட்ட அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.