சிங்கப்பூர் ஊழியர்களின் ஓய்வு
பெறும் வயது 65க்கும் மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வயது 70க்கும் படிப்படியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் மூத்த சிங்கப்பூரர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஓய்வுபெறுதல், மீண்டும் பணியில் அமர்த்தப்படுதல் சட்டம் மத்திய சேம நிதிச் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரப்
படுவது தொடர்பான விவாதம் நேற்று தொடங்கியது.
அதில் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், இந்த மாற்றங்கள் சிங்கப்பூரர்களை ஓய்வுக்
காலத்துக்குத் தயார்ப்படுத்தும் என்று தெரிவித்தார்.
ஓய்வுக்காலம், மீண்டும் வேலையில் அமர்த்தப்படும் வயது தொடர்பான மாற்றம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். தற்போது ஓய்வுபெறும் வயது 62ஆக உள்ளது. இது அடுத்த ஜூலை மாதம் 1ஆம் தேதி 63ஆக உயர்த்தப்படும். மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வயது 68ஆக உயர்த்தப்படும்.
2019ஆம் ஆண்டில் மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழு முன்வைத்த பரிந்துரைகளின்படி இந்த மாற்றங்கள் செய்யப்
படுகின்றன.
2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வுபெறும் வயதையும் மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வயதையும் படிப்படியாக முறையே 65 மற்றும் 70ஆக உயர்த்த பணிக்குழு பரிந்துரை செய்திருந்தது.
அடுத்தடுத்த மாற்றங்கள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அமைச்சு, என்டியுசி, சிங்கப்பூர் முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை இணைந்து முடிவெடுக்கும்.
2020ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் ஊழியரணியில் ஏறத்தாழ 25 விழுக்காட்டினர் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பர். 2010ஆம் ஆண்டில் இந்த விகிதம் 16.5 விழுக்காடாக இருந்தது என்று டாக்டர் டான் கூறினார்.
"ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டுவதற்கு முன்பு வயதைக் காரணம் காட்டி முதலாளிகள் அவர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வயதை எட்டும் வரை ஊழியர்கள் வேலை செய்ய விரும்பி னால் அவர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம்.
"அதே சமயத்தில் மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பான அம்சங்களை மாற்றியமைப்பதில் வர்த்தகங்களுக்குப் போதுமான நீக்குப்போக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருந்து மூத்த ஊழியர்களுக்கு அவை தொடர்ந்து வேலை வாய்ப்புகளை வழங்கலாம்," என்று அமைச்சர் டான் கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதையும் மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வயதையும் நிறுவனங்கள் உயர்த்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத் துறை அவற்றை கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி உயர்த்தியது. அடுத்த பத்து ஆண்டுகளில் 55 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்களுக்கான மத்திய சேம நிதிப் பங்களிப்பு விகிதத்தை உயர்த்த பணிக்குழு
பரிந்துரை செய்துள்ளது.
ஓய்வுக்காலத்தில் அவர்களுக்குப் போதுமான பணம் இருக்கும் சாத்தியத்தை இது அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து மூத்த ஊழியர்களின் மத்திய சேம நிதிப்
பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படும்.
இப்பிரிவினரின் மொத்த மத்திய சேம நிதி விகிதம் 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை ஏற்றம் காணும் என்று தெரிவிக்கப்பட்டது.