மத்திய சேம நிதி வழங்கீடுகளை பெறுவதையும் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிப்பதையும் மேலும் எளிதாக்க மத்திய சேம நிதி விதிமுறைகள் நெறிப்படுத்தப்பட உள்ளன.
ஓய்வுக்காலத் தொகை திட்டத்தின்கீழ் இருப்பவர்களின் ஓய்வுகால கணக்கில் பணம் முடிந்ததும் அவர்களது சாதாரண, சிறப்புக் கணக்குகளிலிருந்து தொடர்ந்து அவர்கள் வழங்கீடுகள் பெறுவதை மத்திய சேம நிதியின் புதிய விதிமுறைகள் உறுதிசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, ஓய்வுகால கணக்கில் பணம் முடிந்ததும் சாதாரண, சிறப்புக் கணக்கு களிலிருந்து ஓய்வுக்கால கணக்குக்குப் பணத்தை மாற்ற அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் மாற்றங்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டினார்.
தற்போது 250,000க்கும் மேற்பட்டோர் ஓய்வுக்காலக் கணக்குத் திட்டத்தின்கீழ் வழங்கீடுகளைப் பெறுகின்றனர்.
இவர்கள் மத்திய சேம நிதி லைஃப் திட்டத்தைத் தேர்ந்தெடுக்காதவர்கள்.
"இந்தத் திட்டத்தின்கீழ் இருப்பவர்களின் ஓய்வுக்கால கணக்கில் பணம் முடிந்ததும் அவர்களுக்கு வழங்கீடு கிடைக்காது.
இருப்பினும், அவர்களில் பலருக்கு சாதாரண, சிறப்புக் கணக்குகளில் பணம் இருக்கிறது. இந்தக் கணக்குகளிலிருந்து ஓய்வுக்கால கணக்குக்குப் பணத்தை மாற்றி தொடர்ந்து வழங்கீடுகளைப் பெறலாம் எனச் சிலருக்குத் தெரியவில்லை. எனவே புதிய விதிமுறையின்கீழ் வழங்கீடு பெறுவதை எளிதாக்குவோம்," என்றார் அமைச்சர் டான். இத்திட்டத்தின்கீழ் இருக்கும் ஏறத்தாழ 83,000 பேர், மாற்றத்தால் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து பலன் அடைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வழங்கீடுகளைப் பெறத் தொடங்கிவிட்ட 75,000 மத்திய சேம நிதி லைஃப் உறுப்பினர்களும் புதிய விதிமுறையால் பலனடைவர்.
அவர்களது மத்திய சேம நிதி லைஃப் வழங்கீடுகளுக்கு அவர்
களுடைய ஓய்வுக்காலக் கணக்கில் உள்ள பணம் பயன்படுத்தப்படும். அதற்காக அவர்கள் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.
அதுமட்டுமல்லாது, 2023ஆம் ஆண்டு முதல் 65 வயதாகும் உறுப்பினர்கள் தங்கள் சாதாரண, சிறப்புக் கணக்குகளிலிருந்து எப்போது ஓய்வுக்கால கணக்குக்கு பணத்தை மாற்றலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
இந்த அணுகுமுறை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடப்புக்கு வரும்.
தற்போதைய நிலவரப்படி, ஒருவர் வழங்கீடுகளைப் பெறத் தகுதி பெற்றவுடன் அவர்களது சாதாரண, சிறப்புக் கணக்குகளிலிருந்து ஓய்வுக்கால கணக்குக்குப் பணம் தானாகவே மாற்றப்படும்.
மத்திய சேம நிதிச் சேமிப்பில் இருந்து பெரிய தொகையை வெளியே எடுப்பது தொடர்பான விதிமுறையில் மாற்றம் இல்லை என்று தெரி விக்கப்பட்டது.
தற்போதைய சில நடைமுறைகளை எளிதாக்க வேறு சில மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு, தாமாகவே முன்வந்து மெடிசேவ் கணக்கில் பணம் போடுவோருக்கு வரி நிவாரணம் வழங்கப்படும்.
இத்திட்டத்துக்கும் ஓய்வுக்கால கணக்கில் பணம் நிரப்பும் திட்டத்துக்கும் சேர்த்து வரி நிவாரணத்துக்கான வரம்பு $8,000ஆக உயர்த்தப்படும்.
விதிமுறை மாற்றத்தை அடுத்து, ஒருவர் இறந்த பிறகு அவரது மத்திய சேம நிதிப் பணத்தை மத்திய சேம நிதி கழகம் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.
தற்போதைய நடைமுறையின்படி ஏழாண்டுகள் வரை மத்திய சேமநிதிப் பணத்தைக் கழகம் வைத்துக்கொள்ளலாம். இந்த விதிமுறை மாற்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை விரைவாக அவரவருக்கு விரைவாகப் பிரித்துக் கொடுக்க எடுக்கப்படும் முயற்சி களில் இதுவும் ஒன்று.