தங்கள் கண்காணிப்பின் கீழ் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அனைத்துத் தரப்புகளின் கவனக்குறைவே ஜாலான் துக்காங் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் ஏற்பட்ட அமைதியின்மைக்குக் காரணம்.
செம்ப்கார்ப் மரின், தங்குவிடுதி நடத்துநர் வெஸ்ட்லைட், மனிதவள அமைச்சு ஆகியவையே மேற்
கூறப்பட்ட தரப்புகள்.
அந்தக் குறைபாடுகளின் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதியன்று அந்த தங்குவிடுதியில் வசித்த வெளிநாட்டு ஊழியர்கள் அங்குள்ள அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு அமைதியை நிலைநாட்ட கலகத்தடுப்பு போலிசார் வரவழைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் மனிதவள அமைச்சு தலையிட்டு, அங்குள்ள 3,000 ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டது என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன்.
வெளிநாட்டு ஊழியர் தங்கு
விடுதிகளை மேற்பார்வையிடும் மனிதவள அமைச்சின் 'ஏஸ்' எனப்படும் உத்தரவாதம், கவனிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழு, தங்குவிடுதி நடத்துநர்கள், முதலாளிகள் ஆகியோருக்கிடையிலான தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்
படுத்தியது.
கொவிட்-19 பெருந்தொற்று சம்பவங்களைக் கையாளும்போது, தங்குவிடுதிகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறையையும் தனிமைப்படுத்தும் முறையையும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் முழுமையாகப் பரிசீலனை செய்தன என்றார் அமைச்சர்.
இதற்கிடையே, ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு தனிப்பட்ட புலனாய்வை மேற்கொண்டு வருகிறது என்றார் டாக்டர் கோ.
ஊழியர் தங்குவிடுதியில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எட்டு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் அந்தத் தங்குவிடுதியில் 174 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. திடீரென ஒரே சமயத்தில் பலரும் பாதிக்கப்பட்டதால், அவர்களை வெளியிடங்களில் தனிமைப்படுத்துவதில் வெஸ்ட்லைட்டுக்கு சிரமமாக இருந்தது.
மேலும் அங்கு தங்கியிருந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் சீனாவிலிருந்து மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் இங்கு வேலைக்கு வந்தவர்கள். அவர்
களிடம் தங்குவிடுதியின் நடை
முறைகளை விளக்குவதற்கு மொழி ஒரு பிரச்சினையாக இருந்தது என்று விளக்கிய அமைச்சர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவிய சீன வர்த்தகச் சமூகம், சிங்கப்பூரிலுள்ள சீனத் தூதரகம், ஹெல்த்செர்வ், வெளிநாட்டு ஊழியர் நிலையம் போன்ற அரசு சாரா அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதற்கிடையே, ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் கொவிட்-19 கிருமித்தொற்று விவகாரத்தில் குழப்பமும் அதிருப்தியும் அடைந்த ஊழியர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் எந்த கைது நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்று உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் நேற்று மன்றத்தில் தெரிவித்தார்.
ஜூரோங் போலிஸ் பிரிவின் சுற்றுக்காவல் அதிகாரிகள் அந்த இடத்துக்கு அனுப்பட்டனர். ஆனால் அதற்கு முன்னதாகவே மனிதவள அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர் என்று திரு டான் விளக்கினார்.
தங்குவிடுதி நடத்துநர்களின் ஒத்துழைப்புடன் அந்த அமைதியின்மை சம்பவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.