மின்சாரக் கட்டணம் அடுத்த ஆண்டு உயரக்கூடும் என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகளாவிய நிலையில் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதை அவர் சுட்டினார். பயனீட்டாளர்களில் 99 விழுக்காட்டினர் நிலையான கட்டணத் திட்டத்தில் மின்சாரச் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளதால் அவர்களுக்கு இதுவரை விலை ஏற்றத்தால் பாதிப்பு ஏற்படவில்லை என்றார் அமைச்சர் டான்.
96 விழுக்காடு வர்த்தகங்களும் நிலையான கட்டணத் திட்டம் அல்லது தள்ளுபடியுடனான வரித் திட்டத்தைக் கொண்டுள்ளளன.
"தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளின் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு அதிகரிக்கும்.
"இதன் காரணமாக மின்சாரக் கட்டணம் ஏற்றம் காணும் என்று டாக்டர் டான் கூறினார்.
தகுதி பெறும் குடும்பங்கள் யு-சேவ் கட்டணக் கழிவுகளைத் தொடர்ந்து பெறும். மின்சார, தண்ணீர் கட்டணங்களைச் சமாளிக்க இவை உதவும் என்றார் அமைச்சர்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்படும் குடும்பங்
களுக்கும் வர்த்தகங்களும் கூடுதல் உதவி தேவைப்படுமா என்பதை ஆராய வர்த்தக, தொழில் அமைச்சும் நிதி அமைச்சும் இணைந்து நிலைமையைக் கண்காணிக்கும் என்று அமைச்சர் டான் தெரிவித்தார்.
சீரற்ற உலகளாவிய எரிசக்தி சந்தையின் விளைவாக மின்சாரச் சேவை வழங்கிய பல நிறுவனங்கள் வர்த்தகத்திலிருந்து விலகியதை அடுத்து, மின்சார விலைகள், எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 கேள்விகளை எழுப்பினர்.
அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் டான் வெளியிட்ட தகவல்கள் அமைந்தன.
சிங்கப்பூர் அதன் பெரும்
பாலான மின்சார உற்பத்திக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை வாயுவை அதிகம் நம்பியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் விலை ஏற்றம் காணும்போது சிங்கப்பூர் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
எரிசக்தி சந்தையின் சீரற்ற நிலையால் மின்சார வர்த்தகங்களான ஐசுவிட்ச், ஒம் எனர்ஜி, பெஸ்ட் எலேக்ட்ரிசிட்டி, யுஜிஎஸ், சில்வர்கிளௌட் எனர்ஜி ஆகிய ஐந்து நிறுவனங்கள் கடந்த மூன்று வாரங்களில் விலகியுள்ளன.
இந்த ஐந்து நிறுவனங்களும் பயனீட்டாளர்களில் ஒன்பது விழுக்காட்டினருக்கு மின்சாரம் வழங்குகின்றன.
இதற்கிடையே பொது மின்சார சந்தை தொடர்ந்து நடைமுறையில் இருப்பது சாத்தியமே என்று அமைச்சர் டான் கூறினார்.
இருப்பினும், அவற்றின் அடித்தளம் பலப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.