பெரிய நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச நிறுவன வரியை விதிக்கும் புதிய உலகளாவிய விதிமுறைகள் நடப்புக்கு வரும்போது, சிங்கப்பூருக்குப் போட்டி இன்னும் கடுமையாகும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
பொருளியல் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகம் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க மானியங்கள், இதரத் திட்டங்களைத் தவிர வரிச்சலுகைகளைப் பயன்படுத்துகிறது. அதனால் சிங்கப்பூர் முதலீடுகளை ஈர்க்கும் வழிகளை விதிமுறைகள் பாதிக்கும் என்றார் பிரதமர்.
முதலீட்டை ஈர்க்கும் வழிமுறைகளை மாற்றுவது பற்றி ஆராயவேண்டும் என்று பிரதமர் கூறினார். ஜி-20 தலைவர்களின் உச்சநிலைக் கூட்டத்துக்குப் பிறகு சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதைத் தெரிவித்தார்.
வேலைகளை உருவாக்கவும் போட்டித்தன்மையைக் காக்கவும் எவ்வாறு முதலீடுகளை ஈர்க்கலாம் என்று நாம் ஆராய வேண்டும் என்றார் திரு லீ.
வரும் 2023ஆம் ஆண்டுக்குள் பெரிய நிறுவனங்களுக்கு உலக அளவில் 15 விழுக்காட்டு குறைந்தபட்ச நிறுவன வரியை விதிக்கும் பரிந்துரைக்கு ஜி20 பொருளியல்களின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் தங்கள் பணத்தை மாற்றிவிடாமல், பெரிய நிறுவனங்களை முறையாக வரி செலுத்தச் செய்வதே அதன் நோக்கமாகும்.
புதிய விதிமுறைகள் தற் போதைய சூழலைப் பெரிதும் மாற்றாது என்று திரு லீ கூறினார். பெரிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க நாடுகள் வேறு வழிகளைக் கண்டறியவே செய்யும் என்றார் அவர்.