அரசியல் கேளிக்கைச் சித்திரங்கள் பற்றிய புதிய நூலை சிங்கப்பூரில் விற்கவோ விநியோகிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அந்த நூலை மதிப்பீடு செய்த அதிகாரிகள், சமயங்களைத் தூற்றும் ஆட்சேபத்துக்குரிய உள்ளடக்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அது பற்றி நேற்று தெரிவித்தது.
'தி ரெட் லைன்ஸ்: பொலிட்டிகல் கார்ட்டூன்ஸ் அண்ட் தி ஸ்ட்ரகல் அகெய்ன்ஸ்ட் சென்சர்ஷிப்' என்பது நூலின் பெயர்.
சமயங்களை அவமதிக்கும் படங்கள் நூலில் உள்ளன என்றது ஆணையம். நபிகள் நாயகம் பற்றி சார்லி ஹெப்டோ சஞ்சிகை வெளியிட்ட சித்திரங்களும் அவற்றுள் அடங்கும். வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்களுக்கும் வன்முறைக்கும் அவை இட்டுச்சென்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அந்த நூலில், இந்து சமயம், கிறிஸ்துவம் ஆகியவற்றை அவ மதிக்கும் குறிப்புகளும் உள்ளன.
ஹாங்காங் பேப்டிஸ்ட் பல்கலைக் கழகத்தில் ஊடகத் துறை விரி வுரையாளராகப் பணியாற்றும் டாக்டர் செரியன் ஜார்ஜ், கேளிக்கை சித்திரப் புதின எழுத்தாளர் சனி லியூ இருவரும் நூலை எழுதினர்.
அந்த நூல் ஏற்கெனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அரசியல் கேளிக்கைச் சித்திரங்களையும் அவற்றுக்குத் தடை விதிப்பதன் காரணங்கள், வழி முறைகள் ஆகியவற்றையும் நூல் ஆராய்கிறது.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு, உள்துறை அமைச்சு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சேர்ந்து அதில் ஆட்சேபத்துக்குரிய 29 படங்கள் இருந்ததைக் குறிப்பிட்டிருந்தன.