மனநலப் பிரச்சினைகளுக்காக 2016 முதல் 2019 வரை சுமார் 49,800 பேர் ஆண்டுதோறும் சிகிச்சை பெற்று வந்தனர் என்று சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் இன்று மன்றத்தில் தெரிவித்தார். அவர்கள் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள் ஆகிய வற்றில் சிகிச்சை பெற்றனர்.
2020ஆம் ஆண்டுக்கான தரவு இன்னும் தயாராகவில்லை என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் ஃபைசல் மனாப்பின் கேள்விக்குப் பதிலளித்த திருவாட்டி ரஹாயு, மேற்கண்ட மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்டப்பட்டுள்ளோர், பெரும்பாலும் மன அழுத்தம், கவலை ஆகியவற்றின் காரணமாக சிகிச்சை பெற்றனர் என்றார்.
ஆண்டுதோறும் மன அழுத்தம் மற்றும் கவலை ஆகிய வற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முறையே 33,700, 34,000 என்று குறிப்பிட்ட திருவாட்டி ரஹாயு, இவ்விரு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரில் 60 விழுக் காட்டினர் 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றும் அவர்களில் 70 விழுக்காட்டினர் சீனர்கள் என்றும் அவர்களில் 30 விழுக்காட்டினர் மூவறை அல்லது சிறிய பொதுக் குடியிருப்பு வீடுகளில் வசிப்பவர்கள் என்றும் விவரித்தார்.
வேலையின்மை, மணவிலக்கு அல்லது வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்தல் ஆகியவையும் மன அழுத்தத்துக்குக் காரணங்கள் என்று 2016ல் நடத்தப்பட்ட சிங்கப்பூர் மனநல ஆய்வு தெரிவித்தது.