ஓய்வுபெறும் வயது மறுவேலை வயது ஆகியவற்றிலும் மத்திய சேம நிதித் திட்டத்திலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மக்கள் பதவி ஓய்வுக்காலத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் அந்தக் காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கவும் வகை செய்யும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் சட்டங்கள் ஒரு சஞ்சீவி அல்ல என்றும், வயதான ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய மாற்றங்களின்படி, ஓய்வுபெறும் வயது, மறுவேலை வயது ஆகியவை படிப்படியாக முறையே 65 வயதுக்கும் 70 வயதுக்கும் உயர்த்தப்படும். தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் முதிய சிங்கப்பூரர்களுக்கு இந்த மாற்றங்கள் பலனளிக்கும்.
மேலும் மத்திய சேம நிதி தொடர்பான விதிகள் எளிமையாக்கப்படும். அதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் தங்கள் சேமிப்புகளை வழங்கீடுகளாகப் பெறுவார்கள்.
"மொத்தத்தில் இந்த மசோதாக்கள் உறுப்பினர்கள் தங்கள் ஓய்வுக்காலத்துக்குத் தயார்ப்படுத்தி, அதனை மகிழ்ச்சியுடன் கழிக்க உதவும். ஆனால் அந்த வேலை அத்துடன் நின்றுவிடாது. முதிய ஊழியர்கள் வேலை வாய்ப்பு தொடர்பான அம்சங்களில் மேலும் முன்னேற்றத்தைக் காண நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்றார் டாக்டர் டான்.
பழைய ஊழியர்களுக்கு மட்டுமின்றி, எதிர்கால மூத்த ஊழியர்களுக்கும் மறுபயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை எளிதாக்குவதில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
தொழிலாளர் சங்கத்தின் நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட தொழில் திட்டமிடல் உரையாடல்கள் போன்ற முன்முயற்சிகளும் தொழிலாளர்களைத் தயார்ப்படுத்துவதில் முக்கியமானவை என்று டாக்டர் டான் மேலும் கூறினார்.
"வேலைவாய்ப்புக்கு முந்தைய பயிற்சியைப் போலவே தொடர்ச்சியான கல்வியும் பயிற்சியும் முக்கியம், இது எங்கள் தொழிலாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கும், தொடர்புடையதாக இருப்பதற்கும், உலகளாவிய போக்குகள் மற்றும் முன்னேற்றங்களுடன் வேகத்தை தக்கவைப்பதற்கும் ஒரு வழிமுறையாகும். அதேவேளையில், சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயது இன்னும் தேவை," என்று அவர் கூறினார்.
"இந்தப் பத்தாண்டு இறுதிக்குள் ஓய்வு வயது மற்றும் மறுவேலை வயதை முறையே 65 மற்றும் 70 ஆக உயர்த்துவதற்கான திட்டம் லட்சியமானது, ஆனால் அடையக்கூடியது," என்று டாக்டர் டான் கூறினார்.
இதற்கிடையே, டாக்டர் டான் இணைத் தலைவராக இருக்கும் பணியிட நேர்மைக்கான முத்தரப்புக் குழு எடுக்கும் நடவடிக்கைகள் முன்னேற்றம் அடைந்து, வயது முதிர்ச்சியைச் சமாளிக்க மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் பாதியில் பரிந்துரைகளை இறுதி செய்யும் என்று குழு நம்புகிறது.
உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் மறுவேலை வாய்ப்பு பற்றியும் பேசிய அமைச்சர், "மறுவேலைவாய்ப்பு கட்டமைப்பானது, முதலாளிகளுக்கு போதுமான நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் அதேவேளையில், மூத்த ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தேவையைச் சமநிலைப்படுத்த வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வணிகங்கள் வேகமானதாகவும் நிலையானதாகவும் இருக்கும்," என்றார் அவர்.