உலகிலேயே அறிவார்ந்த நகர் சிங்கப்பூர்தான். மூன்றாவது ஆண்டாக சிங்கப்பூர் அந்தச் சிறப்பைப் பெற்றுள்ளதாக இந்த ஆண்டின் அறிவார்ந்த நகர் அட்டவணை தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து நிர்வாக மேம்பாட்டுப் பயிலகம் என்ற தொழில்துறைப் பள்ளியும் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் அந்த அட்டவணையை சென்ற மாதம் 28ஆம் தேதி வெளியிட்டன.
நகரங்கள் எந்த அளவுக்கு அறிவார்ந்த வையாக இருக்கின்றன என்பதைக் கண்டறிய 118 நகர்களை அந்த அட்டவணை ஆராய்ந்தது.
நகரமய சூழலைக் கொண்ட, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு நன்மைகளை ஏற்படுத்தித் தருகின்ற, நகரமயம் காரணமாக குடிமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகங்களை மங்கச் செய்கின்ற ஒரு நகரையே அறிவார்ந்த நகர் என்று அந்த அட்டவணை குறிப்பிடுகிறது.
தொழில்நுட்பம் காரணமாக தங்கள் வாழ்க்கை எப்படி மேம்பட்டுள்ளது என்பது பற்றி குடியிருப்பாளர்கள் தெரிவித்தவற்றை அந்த அட்டவணை கருத்தில் கொண்டது.
இந்த ஆண்டு ஜூலையில் ஒவ்வொரு நகரையும் சேர்ந்த ஏறத்தாழ 120 பேர் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டு விவரங்கள் திரட்டப்பட்டன.
நடப்பில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிகள், சேவைகள் பற்றி கருத்துத் தெரிவிக்கும்படி ஒவ்வொரு நகரிலும் ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் கேட்கப்பட்டது.
அவர்கள் தெரிவித்த கருத்துகள் ஐந்து முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன.
சுகாதாரம், பாதுகாப்பு, நடமாட்டம், செயற்பாடுகள், வாய்ப்புகள், ஆட்சி நிர்வாகம் ஆகியவை அந்தப் பிரிவுகள்.
கட்டுப்படியாகக்கூடிய வீடுகள் சுகாதாரச் சேவைகள் போன்ற மொத்தம் 15 முன்னுரிமைத் துறைகளில் இருந்து ஐந்தை தேர்ந்து எடுக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சுவிட்சர்லாந்து பயிலகத்தின் அறிவார்ந்த நகர் கண்காணிப்பகத்தின் தலைவரான டாக்டர் புருனோ லான்வின், சிங்கப்பூர் அட்டவணையில் முதலிடத்தில் இருப்பது பற்றி விளக்கினார்.
நகர நிலையிலும் தேசிய அளவிலும் நடைமுறைப்படுத்திய கொள்கைகளே சிங்கப்பூரின் சாதனைக்குப் பெரிதும் காரணம் என்று அவர் விளக்கினார். குறிப்பாக சிங்கப்பூர் அரசாங்க இணையச் சேவைகள், கல்வி, மக்களை மையமாகக் கொண்ட நகரமய உத்திகள் ஆகியவற்றை அவர் சுட்டினார்.
சார்ஸ் கிருமித்தொற்றைச் சந்தித்துள்ள சிங்கப்பூர், அதன்மூலம் பல நாடுகளைவிட சிறப்பாக கொவிட்-19 தொற்றைச் சமாளிக்க தயாரானதாகவும் அவர் தெரிவித்தார்.