தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க கூடுதல் அதிகாரங்கள்
நாடாளுமன்றத்தில் நினைவுச்சின்ன பாதுகாப்புச் சட்டத்திற்கான மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி இங்குள்ள நினைவுச்சின்னங்களுக்கான வரையறை விரிவுபடுத்தப்படும், பாடாங் போன்ற இடங்கள் அரசிதழில் குறிப்பிடப்பட அதன் மூலம் வழி ஏற்படும்.
அந்தச் சட்ட மாற்றங்கள் காரணமாக தேசிய மரபுடைமைக் கழகத்திற்கு அதிக அமலாக்க அதிகாரங்கள் இருக்கும். தேசிய நினைவுச்சின்னங்களைச் சேதப்படுத்தக்கூடிய வாய்ப்புள்ள தரப்பினர் அத்தகைய செயல்களில் ஈடுபடுவதை புதிய சட்ட மாற்றங்கள் தடுக்கும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
நீட்டிக்கப்படும் அதிகாரங்கள் உத்தேசிக்கப்படும் நினைவுச்சின்னங்களுக்கும் செல்லுபடியாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கழகத்தின் தேசிய நினைவுச்சின்னத் துறை இயக்குநரும் நினைவுச்சின்ன பரிசோதனை அதிகாரிகளும் நீதிமன்ற ஆணை இல்லாமல் நினைவுச்சின்ன கட்டடங் களுக்குள் செல்ல புதிய மாற்றங்கள் அனுமதிப்பது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
அவர்களுக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர், தேசிய மரபுடைமைக் கழகம் தன் அதிகாரங்களைச் சட்ட வரம்புக்கு உட்பட்ட நிலையில் அமலாக்கும் என்று தெரிவித்தார். தேசிய நினைவுச்சின்னங்களின் மதிப்பும் அவற்றின் தனித்தன்மைகளும் கெடாமல் ஆபத்து இன்றி பாதுகாக்கப்படுகின்றன என்பதே அடிப்படை நோக்கம்.
குறிப்பிட்ட சூழலில் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இன்றி பலவந்தமாக அதிகாரிகள் உள்ளே செல்வார்கள் என்று அமைச்சர் எட்வின் டோங் விளக்கினார்.
பாட்டாளிக் கட்சிக்கு அரசியல் கவனிப்பாளர்கள் கோரிக்கை
பாட்டாளிக்கட்சி, செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் செயல்களுக்கு எதிராக உறுதியான நிலையைக் கைக்கொண்டு அதன்மூலம் தன் நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஒன்றின் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தான் பொய் சொன்னதாக திருவாட்டி ரயீசா கான் ஒப்புக்கொண்டுள்ளார். திருவாட்டி ரயீசா கானைக் கைவிடுவதைத்தவிர கட்சிக்கு வேறு வழியில்லை என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளி இணைப் பேராசிரியர் ஜும்ப்லாட் அப்துல்லா தெரிவித்தார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இணைப் பேராசிரியர் இயூஜின் டான், 2020 பொதுத் தேர்தலின்போது திருவாட்டி ரயீசா கான், ஃபேஸ்புக்கில் தெரிவித்த இரண்டு கருத்துகள் தொடர்பில் மன்னிப்பு கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைச் சுட்டினார்.
ஆனால் அவர் இப்போது செய்து இருப்பது அதைவிடக் கடுமையானது என்றார் அவர்.
'போவர்குரூப்ஆசியா சிங்கப்பூர்' என்ற நிறுவனத்தில் உத்திபூர்வ ஆலோசனைத் துறை நிர்வாக இயக்குநராக இருக்கும் திருவாட்டி நைடியா ஜியோவ், இந்த விவகாரத்தைப் பாட்டாளிக்கட்சி எப்படிக் கையாளுகிறது என்பது நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவரும் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரித்தம் சிங்கிற்கும் அந்தக் கட்சியின் இதர தலைவர்களுக்கும் ஒரு சோதனையாக இருக்கும் என்றார்.
குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு ஜிஎஸ்டி நீட்டிப்பு
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி), விமானம் அல்லது அஞ்சல் மூலம் இறக்குமதி செய்யப்படும் $400 மற்றும் அதற்குக் குறைவான மதிப்புள்ள பொருட்களுக்கு 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் நீட்டிக்கப்படும்.
நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இறக்குமதி செய்து தரும் மின்னிலக்கம் சாராத சேவைகளுக்கும் அது நீட்டிக்கப்படும். இந்த ஏற்பாடு, உள்ளூர் நிறுவனங்கள் எதிர்நோக்கும் தொழில் பாதிப்பைச் சரிசெய்யும் என்று நாடாளுமன்றத்தில் இரண்டாம் நிதி அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
ஜிஎஸ்டி (திருத்த) மசோதா விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், ஜிஎஸ்டி வரி இப்படி நீட்டிக்கப்படுவதால் வரி வருவாயைத் தற்காக்கவும் உதவி கிடைக்கும் என்றார்.
மசோதாவை மன்றம் ஏற்றுக்கொண்டது. விமானம் மூலம் அல்லது அஞ்சல் வழி இறக்குமதியாகின்ற $400க்கும் குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு இப்போது ஜிஎஸ்டி வரி கிடையாது. இது உள்ளூர் நிறுவனங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் சுட்டினார்.
வாடகை வீடுகளை அதிகரிக்க கோரிக்கை; அமைச்சர் விளக்கம்
வீட்டு உடைமை என்பது விரும்பப்படும் ஒன்றுதான் என்றும் அது வாடகைக்கு விடும் விருப்பத்தைவிட உயர்ந்த ஒன்றல்ல என்றும் செங்காங் குழுத்தொகுதி பாட்டாளிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா மன்றத்தில் தெரிவித்தார்.
ஆகையால் சிங்கப்பூரர்களின் மாறிவரும் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் அனைத்து வகை வாடகை வீடுகளையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளைச் சொந்தமாக வாங்குவற்குப் பதிலாக மக்கள் வீட்டை வாடகைக்குப் பெற வகை செய்யும் தாக்குப்பிடிக்கக்கூடிய பொது வாடகைத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அவருக்கு விளக்கம் அளித்த தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், அத்தகைய வாடகை ஏற்பாடு, சமூக நியதிகளை மாற்றி அமைத்து சமூகங்களை வலுவிழக்கச் செய்துவிடும் என்றார்.
சொந்த வீடு என்றால் மக்களுக்கு நிரந்தர வசிப்பு உணர்வு இருக்கும். வாடகை வீடு என்றால் அத்தகைய ஓர் உணர்வு இருக்காது. பலவற்றையும் ஆழ்ந்து சீர்தூக்கிப் பார்க்காமல் மேலோட்டமாக அத்தகைய ஒரு திட்டத்தைத் தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று தனது பதிலில் அமைச்சர் தெரிவித்தார். வீவகவின் ஆகப் புதிய வருடாந்திர அறிக்கையைப் பார்க்கையில் இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 63,773 வாடகை வீடுகள் இருந்தன. விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1.02 மில்லியன்.