மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் காலாவதியாகிவிட்டால் அவற்றைக் கையாளுவதற்கான இதர தொழில்நுட்பங்களையும் தீர்வுகளையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கு அளித்த பதிலில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
அத்தகைய மின்கலன்களை எரிசக்தியைச் சேமிக்கும் சாதனங்களாக மீண்டும் பயன்படுத்துவதற்குத் தோதாக தொழில்துறை ஆற்றல்களை எரிசக்தி சந்தை ஆணையம் பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்களை இப்போதும் எதிர்காலத்திலும் முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு இடம்பெறும் நடவடிக்கைகள் பற்றி உறுப்பினர் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், அத்தகைய மின்கலன்கள் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்புத் திட்டத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதாகக் கூறினார்.
இந்தத் திட்டம் 2021 ஜூலை 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அதன்படி அத்தகைய மின்கலன் களை இறக்குமதி செய்து இங்கு விற்கும் நிறுவனங்கள், அவற்றைச் சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
அத்தகைய மின்கலன்கள் உரிமம் பெற்ற உள்ளூர் மின்சாரக் கழிவு மறுபுழக்க நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அல்லது ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அவற்றில் இருந்து கோபால்ட், லித்தியம், நிக்கல், தாமிரம் போன்ற உலோகங்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. அத்தகைய மின்கலன் களை மறுபுழக்கத்திற்கு விடுவதற்கான சிங்கப்பூரின் ஆற்றல்களை மேலும் வலுப்படுத்துவதன் தொடர்பில் உள்ளூர் மறுபுழக்க தொழில்துறையுடன் தேசிய சுற்றுப்புற வாரியம் செயல்பட்டுவருவதாக அமைச்சர் கூறினார்.