மத்திய விரைவுச்சாலையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையின் சுவரில் கார் ஒன்று மோதி, தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்தது.
கார் தீப்பற்றுவதற்குச் சற்று முன்னதாக வழிப் போக்கர்கள் இருவர், ஓட்டுநர் இருக்கையில் இருந்த 33 வயது பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர்.
அப்பெண் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து மாலை 5.05 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிட்டியது.
விரைந்து வந்த குடிமைத் தற்காப்புப் படையினர், குறைந்த அழுத்தக் காற்று நுரையைப்
பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இவ்விபத்தில் வேறு எவரும் காயமுறவில்லை.
இதுதொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. சுரங்கப்பாதையின் இடது ஓரத் தடத்தில் ஒரு கறுமைநிற 'ஹோண்டா ஃபிட்' கார் தீப்பற்றி எரிவதை அவை காட்டுகின்றன. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.