சிங்கப்பூர் எங்கும் உள்ள 70 இரவு விடுதிகளில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையை அடுத்து, மொத்தம் 183 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த அதிரடிச் சோதனைகள் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியிலிருந்து கடந்த மாதம்
23ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொவிட்-19 விதிமுறைகளை 15 பொழுதுபோக்கு, இரவுவிடுதிகள் மீறியதாக அதிரடிச்
சோதனையில் தெரியவந்தது. இந்த இடங்கள் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
"கொவிட்-19 விதிமீறல்களைக் காவல்துறை சகித்துக்கொள்ளாது. கொவிட்-19 விதிமுறையை மீறு
பவர்களுக்கு எதிராக சட்டரீதியாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று காவல்துறை தெரிவித்தது.
சையது ஆல்வி சாலையில் உள்ள கடைவீட்டுக்குள் உரிமம் இல்லாமல் கேடிவி விடுதி நடத்தப்படுவதாக தகவல் அறிந்த காவல்துறையினர் கடந்த மாதம் 2ஆம் தேதியன்று அங்கு அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த இடத்தில் எட்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். அவர்கள் 18 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கொவிட்-19 விதிமீறல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அந்த உரிமம் இல்லா கேடிவி விடுதியை நடத்தியதாக நம்பப்படும் 21 வயது ஆடவர் போதைப்
பொருள் வைத்திருந்ததாகக் கூறப்
படுகிறது. அவருடன் சேர்த்து 18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர் ஒருவரையும் பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்பர் பாய லேபார் சாலையில் உள்ள கட்டடத்தில் பலர் ஒரே இடத்தில் ஒன்றுகூடியதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, கடந்த மாதம் 4ஆம் தேதியன்று அங்கு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 28 வயது ஆடவர்
சூதாட்டக்கூடம் ஒன்றை நடத்தியது தெரியவந்தது.
அதிரடிச் சோதனை நடத்தப்பட்டபோது அவ்விடத்தில் பத்து ஆடவர்களும் மூன்று பெண்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அப்பர் தாம்சன் சாலையில் உள்ள தாகூர் லேனில் உரிமம் இல்லா கேடிவி விடுதி நடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு அதிரடிச் சோதனை நடத்திய காவல்துறையினர் அவ்விடத்தில் 39 ஆடவர்களும் 16 பெண்களும் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அவர்கள் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். சமூக இடைவெளி விதிமுறையை மீறியது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.