முகக்கவசம் அணியச் சொன்ன பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு ஆடவர்களும் 61 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நேற்று முன்தினம் காலை 10.50 மணி அளவில் லோயாங் அவென்யூவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பேருந்தில் இருந்த அந்த இரு ஆடவர்களும் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் பேருந்து ஓட்டுநர் எவ்வாறு தாக்கப்பட்டார் என்ற விவரத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை. ஓட்டுநரைத் தாக்கியதாக நம்பப்படும் இருவரையும் பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அடையாளம் கண்டு கைது செய்தனர். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்
படுத்தப்பட்ட சமூக இடைவெளி விதிமுறையை மீறியது தொடர்பாகவும் கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் எண்ணத்துடன் இருவரும் இணைந்து பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறையுடனும் அபராதமும் விதிக்கப்படலாம். கொவிட்-19 விதிமுறையை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் $10,000 அபராதமும் ஆறு மாதங்கள் வரை சிறையும் விதிக்கப்படலாம்.