ப. பாலசுப்பிரமணியம்
கடந்தாண்டு தீபாவளி கொண்டாட்டங் fளின்போது, ஐந்து பேராக ஒருவரின் வீட்டிற்கு செல்ல முடிந்தது.
இவ்வாண்டு அதிகரித்துவரும் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு வீட்டில் நாளுக்கு அதிகபட்சமாக இரண்டு விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
அதனால் பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர் ஆகியோரின் வீடுகளுக்கு வட்டமடித்து வந்தவர்களுக்கும் அவர்களை வரவேற்றவர்களுக்கும் இன்றைய தீபாவளி நாள் அமைதியாகக் கழிகிறது.
சொத்து முகவர்களான த.கணேசன் - செ.மஹாலட்சுமி தம்பதியினர் யார் வீட்டுக்கும் செல்லாமல் தங்களது இரு இளம் குழந்தைகளுடனும் வீட்டிலேயே உறவாடி, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டாடுகின்றனர்.
"கைபேசி, காணொளி வழியாக நெருங்கியவர்களுக்கு வாழ்த்துச் சொல்வோம். ஒரு வயது நிறையவுள்ள மகன் சர்வினை அடுத்தாண்டு தீபாவளிக்காவது வெளியே அழைத்துச் செல்ல விரும்புகிறோம்," என்று கூறினார் தாயார் மஹாலட்சுமி, 33.
விக்டர்-குமுதா தம்பதியினர் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, மூன்று வயது மகன் ஆர்காஷ் கேலனை தங்கள் பெற்றோரின் வீடுகளுக்கு தனித்தனியே அழைத்துச் செல்வது பற்றி பரிசீலித்து வந்தனர்.
"பேரப்பிள்ளைகளை தீபாவளி நாளன்று பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் பெற்றோ ருக்கு இருக்கும். வெளியே செல்வதாக இருந்தால், பெற்றோரை இருவராக மட்டும் பார்க்கச் செல்வோம். மகனுக்கு தீபாவளிக் கொண்டாட்ட அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை," என்றார் தொடர்புத் துறையில் நிர்வாகியாகப் பணி புரியும் குமுதா, 38.
முன்பெல்லாம் தீபாவளி அன்று பிற்பகல் முதல், குறைந்தது 20 விருந்தினர்கள் தமது வீட்டில் கூடுவர் என்று குறிப்பிட்டார் தொழில்நுட்ப அதிகாரி திரு ஜெயகுமார். இம்முறை ஒரு நாளுக்கு இருவர் என்று அட்டவணை போட்டுவிட்டார்.
"வீட்டிற்கு அனுமதிக்கும் விருந்தினர் எண்ணிக்கையை பொறுத்து, இவ்வாண்டு பல வாரம் நீடிக்கும் தீபாவளிக் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் அடுத்த சில வாரங்களில் அனுமதி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பதை அறிவோம்," என்று தெரிவித்தார் திரு ஜெயகுமார், 65.
ஒரு வாரம் விடுப்பு எடுத்து, மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் தம் உற்றார், உறவினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது திரு தே.தமிழ்ச்செல்வனுக்கு வழக்கம்.
எல்லைக் கட்டுப்பாடுகளால் அதில் தற்காலிக நிறுத்தம். இன்று புத்தாடைகள் அணிந்து, புகைப்படங்களை கைபேசியில் பகிர்ந்துகொண்டு 'வாட்ஸ்அப்' செயலி வழி, அனைவருடனும் ஒரே நேரத்தில் இணைந்து பேச காத்திருக்கிறார் அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றும் தமிழ்ச்செல்வன், 40.
வெளிநாட்டுக்கு வேலை காரணமாகச் சென்ற கப்பல் துறை மேலதிகாரி வி.விஜய், தீபாவளி நாளான இன்று வீட்டில் தடைக்காப்பில் இருக்கிறார்.
"என் வேலை காரணமாக பல முக்கிய கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது. எனினும், ஒவ்வோர் ஆண்டும் உடல்நலனைப் பாதுகாத்து, குடும்பத்தாருடன் தீபாவளியைக் கொண்டாட முடிவதைப் பேறாகக் கருதுகிறேன். வீட்டில் சமைக்கும் தீபாவளி விருந்தை என் பெற்றோர் விநியோகச் சேவை வழி அனுப்பி வைக்கவுள்ளார்கள்," என்று கூறினார் 56 வயது திரு விஜய்.