வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் குறைந்து வருவதால் சிங்கப்பூரில் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் ஒன்றுக்குக் குறைவாகப் பதிவாகி உள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சாத்தியம் இருப்பதாக தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அதில் கவனம் தேவை என்றும் மெத்தனப்
போக்குடன் இருந்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாதிப்பு குறைந்து வரும்போதிலும் கட்டுப்பாடுகள் கூடிய விரைவில் தளர்த்தப்படாது என்று அவர்கள் நம்புகின்றனர். கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு கடந்த மாதம் 20ஆம் தேதியன்று அறிவித்தது.
ஒரே இடத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே ஒன்று
கூடவோ அல்லது உணவகங்களில் சாப்பிடவோ முடியும் என்ற கட்டுப்பாடும் இதில் அடங்கும். சிங்கப்பூரில் நிலைமை சீராவதற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுவதால்
இந்தக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 21ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் நடைமுறைப்
படுத்தப்பட்டு இரண்டு வாரங்
களானதும் அவை மறுபரிசீலனை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் நிலைமையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
வாராந்திரத் தொற்று அதிகரிப்பு விகிதம் ஒன்றுக்குக் குறைவாகப் பதிவானால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வெளியே சாப்பிட அனுமதிக்கப்படுவர் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, மேலும் பல குழு விளையாட்டுகளும் பள்ளி நடவடிக்கைகளும் தொடர அனு
மதிக்கப்படலாம்.
மருத்துவமனைகளில், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நிலைமை சீராக இருந்தால்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வாராந்திரத் தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒன்றுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தளர்த்த வேண்டும் என்று மவுண்ட் எலிசபெத் நொவீனாவில் உள்ள ரொஃபி மருந்தகத்தைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர்
டாக்டர் லியோங் ஹோ நாம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் அன்றாடப் பாதிப்பு ஏறத்தாழ 2,000ஆக இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோர் விகிதம் ஏறத்தாழ 50 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காட்டுக்குள் இருந்தால் மட்டுமே சிங்கப்பூரில் நிலைமை சீராக இருப்பதாகவும் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு நெருக்குதல் இல்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம் என்றார் டாக்டர் லியோங்.