புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவில் உள்ள செங்குத்தான பாறையிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி மண் சரிந்து விழுவதால் அப்பூங்காவுக்குச் செல்பவர்களும் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் அவ்விடத்தில் மண் குவிந்து கிடப்பதாக புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவுக்கு அடிக்கடி செல்லும் 75 வயது திரு டின் தெரிவித்தார்.
"இரவு நேரங்களில் நான் வீட்டில் இருக்கும்போது மண் சரிந்து விழும் சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது. பெருமளவிலான நிலச்
சரிவு ஏற்படும்போது அந்தச் சத்தம் குலை நடுங்க வைக்கிறது.
பக்கத்தில் உள்ள சரிவிலிருந்து சிறிய அளவிலான நிலச்சரிவு நிகழ்ந்ததாக திரு டின் தெரிவித்தார். ஆனால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு அது
நின்றுவிட்டதாக அவர் கூறினார்.
அருகில் உள்ள புக்கிட் பாத்தோக் தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரத்தை அது பாதிக்கும் எனத் தாம் பயந்ததாக திரு டின் கூறினார்.
நேற்று காலை 11.30 மணி அளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி யாளர்கள் அங்கு சென்றபோது செங்குத்தான பாறைக்குக் கீழ் மண் குவிந்துக் கிடப்பதை அவர்கள் கண்டனர். அதில் பெரிய கற்களும் மரக்கிளைகளும் இருந்தன.
புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவில் நிலச்சரிவு நிகழ்வது கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியதாக அங்கு நாள்தோறும் சைக்கிளோட்டும் திரு எரிக் டான் தெரிவித்தார்.
"முதலில் பெரிய கற்கள் கீழே விழுந்தன. தற்போது சிறிய கற்கள், மண் சரிந்து விழுகின்றன," என்றார் அவர்.
நிலச்சரிவு நிகழ்வதற்கு முன்பு அந்தச் செங்குத்தான பாறைக்கு மேல் மரங்கள் இருந்ததாக அவர் கூறினார்.
இதற்கிடையே, சரிந்து விழும் மண்ணால் ஆபத்து ஏதுமில்லை என்று பூங்காவிற்குச் செல்லும் சிலர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் பார்த்ததுபோலவே அந்தச் செங்குத்தான பாறை அப்படியே இருப்பதாக 30 வயது ஏஞ்சலின் ஹோ கூறினார்.
"மனித உயிருக்கு ஆபத்து இருந்தால் மட்டுமே புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மண் சரிந்து விழுவது இயற்கை என்பது என் கருத்து. அப்பகுதியில் யாரும் நடந்து செல்வதில்லை.
"எனவே, அதை அப்படியே விட்டுவிட வேண்டும்," என்றார் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் வசிக்கும் திருவாட்டி ஹோ.