கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பங்களித்த 100,000 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் துணிச்சல் மற்றும் விலைமதிப்பிட முடியாத பணிக்காக, அவர்கள் ஒவ்வொருவர்க்கும் சிறப்பு விருதாக $4,000 வெகுமதி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்து இருக்கிறார்.
இந்த 'கொவிட்-19 சுகாதாரப் பராமரிப்பு விருது', தீவிரப் பராமரிப்பு மருத்துவமனைகள், சமூக மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் போன்ற பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கும் தாதிமை இல்லங்கள் போன்ற முன்களச் சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்கும் சமூகப் பராமரிப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
இதனுடன், ஒவ்வொரு பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகத்திற்கும் $10,000 மானியம் வழங்கப்படும்.
மானியத் தொகையை பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங் களின் ஊழியர்கள் பகிர்ந்துகொள்வர்.
நேற்று இடம்பெற்ற தேசிய மருத்துவ உன்னத விருதுகள் நிகழ்ச்சியின்போது அமைச்சர் ஓங் இதனை அறிவித்தார்.
பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலைய ஊழியர்களுக்கான வெகுமதி வரும் டிசம்பர் மாதத்திலும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களுக்கான வெகுமதி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.