தியோங் பாருவில் அமைக்கப்பட்ட ஒரு புதிய சமூகத் தோட்டத்தில் விளையும் காய்கறிகளும் கீரை வகைகளும் அந்தப் பேட்டையில் உள்ள குடியிருப்பாளர்களுக்கே தரப்படும். புளோக் 119ஏ கிம் தியென் ரோட்டில் உள்ள பலமாடி கார் நிறுத்துமிடக் கட்டடத்தின் மேற்கூரையில் சமூகத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
'தி கிவிங் கார்டன் @ கிம் தியென் வெஸ்ட்' எனும் பெயர் கொண்ட அந்த தோட்டம், நேற்று அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 1,020 சதுர மீட்டர் பரப்பளவை அது கொண்டுள்ளது.
கத்தரிக்காய், காய்லான் கீரை, கங் கோங் கீரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காய்கறி, கீரை வகைகள் தோட்டத்தில் விளைந்துள்ளன.
சமூகத் தோட்டத்தில் காய்கறி, கீரைகளைப் பயிரிடும் பணி கடந்த மாதம் தொடங்கியது. தஞ்சோங் பகார் நகர மன்றம் வழிகாட்ட, சுமார் 40 தொண்டூழியர்கள் அப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில், 230 பைகள் நிறைய காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டன. அவை கிம் தியென் ரோடு புளோக் 119இன் குடியிருப்பாளர்களுக்கும் அங்குள்ள என்டியூசி ஹெல்த் மூத்தோர் நட வடிக்கை நிலையத்துக்கும் நேற்று அளிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் உள்ள பல சமூகத் தோட்டங்கள் தன்னிச்சையாக நடத்தப்படுகின்றன. தி கிவிங் கார்டன் தோட்டம், தஞ்சோங் பகார்-தியோங் பாரு குடிமக்கள் ஆலோசனைக் குழு, கிம் தியென் வெஸ்ட் குடியிருப்பாளர் செயற்குழு, தேசிய பூங்காக் கழகம், தஞ்சோங் பகார் நகரமன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
பிரதமர் அலுவலக அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகருமான திருவாட்டி இந்தி ராணி ராஜா, சமூகப் பிணைப்பை வலுப்படுத்த தாம் இந்த யோசனையை முன்வைத்ததாகக் கூறினார். நீடித்த நிலைத்தன்மையையும் இது ஊக்குவிக்கும் என்றார் அவர்.