சிங்கப்பூரில் இதுவரை நான்கு சிறுவர்களுக்கு கொவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய அரியவகை அழற்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவனான நான்கு வயதுச் சிறுவன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அவனுக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு நேற்று சனிக்கிழமை இரவு இத்தகவலைத் தெரிவித்தது.
கொள்ளைநோய் பரவத் தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் 8,000 குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் கொவிட்-19 தொற்றியுள்ளது.
மேற்கூறப்பட்ட அந்த நான்கு சிறுவர்களும் அவர்களில் அடங்குவர்.
சிறார்களிடம் காணப்படும் இந்த அரியவகை அழற்சி பாதிப்பு, ஆங்கிலத்தில் multi-system inflammatory syndrome என அழைக்கப்படுகிறது.
இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, கண்கள் உள்ளிட்ட வெவ்வேறு உடலுறுப்புகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த அழற்சிப் பாதிப்பு ஏற்பட்டால், மூன்று நாள்களுக்கு அல்லது அதற்கும் மேலாக 38.5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக காய்ச்சல் நீடிக்கும்.
மூச்சு விடுவதற்குச் சிரமம், தலைவலி, கழுத்தில் வீக்கம், தோலில் தடிப்பு, கை மற்றும் காலில் வீக்கம், வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படக்கூடும்.